டெல்லி மேலிட பாஜ தலைவர்களின் மிரட்டலுக்கு பணிந்து அமித்ஷாவை கடைசி நேரத்தில் சந்தித்த எடப்பாடி: தேர்தல் கூட்டணியும் உறுதியானது

1 week ago 3

சென்னை: டெல்லி மேலிட பாஜ தலைவர்களின் மிரட்டலுக்கு பணிந்து கடைசி நேரத்தில் அமித்ஷாவை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி. இதையடுத்து 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணி உறுதியானது. ஒன்றிய உள்துறை அமித்ஷா 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் தனி விமானத்தில் சென்னை வந்தார். கிண்டியில் உள்ள ஐடிசி நட்சத்திர ஓட்டலில் அமித்ஷா நேற்று மதியம் 12 மணிக்கு அதிமுக – பாஜ கூட்டணி குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பார் என செய்தி வெளியானது. ஆனால், அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி தொடர்ந்து மறுத்து வந்தார்.

காரணம், அண்ணா மலையை மாநில பாஜ தலைவர் பதவியில் இருந்து நீக்க வேண்டும், அதிமுக தலைமையில்தான் சட்டமன்ற தேர்தலை சந்திக்கும் என அறிவிக்க வேண்டும், ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட சசிகலா தரப்பினர் யாரையும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்று வற்புறுத்தக் கூடாது என்று எடப்பாடி நிபந்தனை விதிப்பதால்தான் அமித்ஷாவை அவர் சந்திக்க மறுப்பதாக கூறப்பட்டது. இதுபோன்ற இழுபறி யால் அமித்ஷாவின் பத்திரிகையாளர் சந்திப்பு மதியம் 12 மணியில் இருந்து தள்ளிப்போனது.

மேலும், பேட்டி கொடுக்கும் இடத்தில் 7 நாற்காலிகள் போடப்பட்டு இருந்தது. இதில் அதிமுக – பாஜவில் உள்ள கூட்டணி கட்சி தலைவர்கள் இடம்பெற ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. ஆனால், எடப்பாடியின் பிடிவாதத்தில் இந்த முயற்சி நேற்று தோல்வி அடைந்தது. இதற்கு முழு காரணம் எடப்பாடிதான் எனகூறப்பட்டது. இதனால் உள்துறை அமைச்சர் அமித்ஷா நிருபர்களை சந்திக்காமல் நட்சத்திர ஓட்டலில், அவருக்கு ஒதுக்கப்பட்ட அறையிலேயே 3 மணி நேரத்துக்கும் மேல் தங்கினார்.

அதேநேரம், அடையாறு கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடியுடன் அதிமுக மூத்த நிர்வாகிகள் கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட சில தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அப்போது அதிமுக – பாஜ கூட்டணி ஏற்பட்டால் ஏற்படும் சாதக, பாதகம் குறித்து விவாதிக்கப்பட்டது. கடைசியாக எடப்பாடியின் முக்கிய கோரிக்கையான அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்பதை அமல்படுத்த பாஜ மேலிடம் முடிவு செய்தது. இதற்காக நயினார் நாகேந்திரன் வேட்பு மனு தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.

அதை அண்ணாமலையே முன்மொழிவது என்றும் முடிவு செய்யப்பட்டு, மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த தகவல் வெளியான பிறகே அமித்ஷாவை சந்திக்க எடப்பாடி சம்மதித்தார். இதையடுத்து மாலை 4.30 மணிக்கு எடப்பாடி ஒரு வழியாக அமித்ஷாவை சந்தித்து, பாஜ கூட்டணியில் இணைய சம்மதம் தெரிவித்தார். பின்னர் கிரீன்ஸ்வேஸ் சாலையில் இருந்து மாலை 4.45 மணிக்கு எடப்பாடி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி கிண்டியில் உள்ள ஐடிசி ஓட்டலுக்கு புறப்பட்டு சென்றனர். அங்கு 5 மணிக்கு போய் சேர்ந்தனர்.

மாலை 5.10 மணிக்கு அமித்ஷா பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அதிமுக தரப்பில் எடப்பாடி, கே.பி.முனுசாமி, எஸ்.பி.வேலுமணி ஆகியோரும், பாஜ தரப்பில் அமித்ஷா, அண்ணாமலை, நயினார் நாகேந்திரன் ஆகியோரும் பங்கேற்றனர். அப்போது பேட்டி அளித்த அமித்ஷா, ‘2026ம் ஆண்டு நடைபெறும் தமிழக சட்டப்பேரவை தேர்தலில் அதிமுக – பாஜ கூட்டணி அமைத்து போட்டியிடும். கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும்’ என்றார். பத்திரிகையாளர்களிடம் அமித்ஷா மட்டுமே பேசினார். எடப்பாடி பழனிசாமி பத்திரிகையாளர்களிடம் பேசவில்லை. அமித்ஷா அதற்கு அனுமதியும் கொடுக்கவில்லை.

எது எப்படியிருந்தாலும், அமித்ஷாவின் சென்னை பயணம் மூலம் அதிமுகவை மிரட்டி பாஜ கூட்டணியில் இணைய வைத்து விட்டதாகவே சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். அதேநேரம், எடப்பாடியும், கடைசி வரை விட்டுக் கொடுக்காமல் தனது திட்டங்கள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்று பாஜ மேலிடம் உறுதி அளித்த பிறகே, பல மணி நேரம் அமித்ஷாவை காக்க வைத்து அவரை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

* கூட்டணியில் சேராவிட்டால்…
சென்னைக்கு வந்த அமித்ஷா நேற்று மதியம் 12.30 மணிக்கு சென்னை மயிலாப்பூரில் உள்ள ஆடிட்டர் வீட்டுக்கு வந்தார். அவருடன் சுமார் ஒன்றரை மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதைத்தொடர்ந்து எடப்பாடியை அமித்ஷா உள்ளிட்ட சில பாஜ மூத்த தலைவர்கள், அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதுள்ள ஊழல் புகார்களை சொல்லி, கூட்டணியில் சேராவிட்டால் பின்விளைவுகளை சந்திக்க வேண்டியது வரும் என மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. தேர்தல் ஆணையத்தில் அதிமுக யாருக்கு சொந்தம் என்ற வழக்கு குறித்தும் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

* எதையோ பறிகொடுத்த முகத்துடன் பழனிசாமி….
அமித்ஷா பத்திரிகையாளர்களை சந்தித்தார். பேட்டி முடிந்ததும், எடப்பாடியை பத்திரிகையாளர்களிடம் பேச வேண்டாம் என்று கூறி, முதுகில் லேசாக தட்டி அழைத்து சென்றார். மேடையை விட்டு இறங்கியதும், மீண்டும் அதிமுக – பாஜ தலைவர்கள் 6 பேர் மட்டும் மேடைக்கு வந்து கைகோர்த்து கூட்டணி உறுதியானதை பத்திரிகையாளர்களிடம் உறுதிப்படுத்தினர். ஆனால், கடைசி வரை எடப்பாடி பழனிசாமி முகத்தில் எந்த சிரிப்பும் இல்லாமல், அமைதியாக, எதையோ பறிகொடுத்தது போன்று பார்த்துக் கொண்டிருந்தனர். இது அதிமுகவினர் இடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

The post டெல்லி மேலிட பாஜ தலைவர்களின் மிரட்டலுக்கு பணிந்து அமித்ஷாவை கடைசி நேரத்தில் சந்தித்த எடப்பாடி: தேர்தல் கூட்டணியும் உறுதியானது appeared first on Dinakaran.

Read Entire Article