டெல்லி மேயர் தேர்தல் எப்போது? வெளியான தகவல்

3 months ago 22

புதுடெல்லி,

டெல்லியில் மொத்தமுள்ள 250 வார்டுகளில், கடந்த 2022-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ம் தேதி நடந்த டெல்லி மாநகராட்சி தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி, 134 இடங்களை வென்றது. பா.ஜ.க.வுக்கு 104 வார்டுகள் கிடைத்தன. காங்கிரஸ் கட்சி 9 இடங்களையும், சுயேச்சைகள் 3 இடங்களையும் கைப்பற்றின.

எனினும், நியமன உறுப்பினர்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தில் மேயர் தேர்தல் 3 முறை தள்ளி வைக்கப்பட்டது. இதில், ஒரு கூட்டத்தில் ஆம் ஆத்மி மற்றும் பா.ஜ.க. என இரண்டு கட்சிகளும் மோதி கொண்டன. இதற்காக ஆம் ஆத்மியின் ஷெல்லி ஓபராய், சுப்ரீம் கோர்ட்டுக்கும் சென்றார். இதன்பின்னர், 4-வது முயற்சியில் ஓபராய் டெல்லி மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதன்படி, கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சியின் பெண் கவுன்சிலர் ஷெல்லி ஒபராய், பா.ஜ.க. வேட்பாளரை 34 வாக்குகள் வித்தியாசத்தில் வென்று மேயர் ஆனார். துணை மேயராக ஆம் ஆத்மி கட்சியின் ஆலே முகமது இக்பால் தேர்வு பெற்றார். கடைசி நேரத்தில் பா.ஜ.க. வேட்பாளர்கள் வாபஸ் வாங்கினர். இதனால் ஷெல்லி ஓபராய் மீண்டும் மேயராக போட்டியின்றி தேர்வு பெற்றார்.

இந்த சூழலில், நடப்பு ஆண்டில் டெல்லி மேயர் மற்றும் துணை மேயர் தேர்தல் கடந்த ஏப்ரல் மாதம் 26ம் தேதி நடக்கவிருந்த நிலையில் பல்வேறு காரணங்களால் ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், 6 மாத கால தாமதத்திற்கு பிறகு டெல்லியில் மேயர் தேர்தல் நடைபெறவுள்ளதாகவும், தீபாவளிக்கு முன்பாக இந்த தேர்தல் நடத்தப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளன.

தேர்தல் தேதியை முடிவு செய்யும் கோப்பு டெல்லியின் தற்போதைய மேயர் ஷெல்லி ஒபராய்க்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த மேயர் தேர்தலுக்கு ஆம் ஆத்மி, பாஜக கட்சி வேட்பாளர்கள் ஏப்.13ம் தேதியே வேட்புமனு தாக்கல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Read Entire Article