புதுடெல்லி,
டெல்லியில் மெட்ரோ ரெயிலில் கடந்த 2024-ம் ஆண்டில் பயணம் செய்த பயணிகள் ரெயிலில் விட்டு சென்ற பொருட்களை மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் (சி.ஐ.எஸ்.எப்.) கைப்பற்றி வைத்திருந்தனர். இதன்பின்னர் அவற்றை கேட்டு வருபவர்களிடம் ஆவண சரிபார்ப்புகள் செய்யப்பட்டு, உரியவர்களிடம் பொருட்கள் ஒப்படைக்கப்பட்டு வருகின்றன.
ரெயில் பயணிகளில் பலர் மறந்து போய், எக்ஸ்-ரே ஸ்கேன் செய்யும் பகுதியருகே தங்களுடைய உடமைகளை விட்டு செல்கின்றனர். இவற்றில், ரூ.40.74 லட்சம் பணம், 89 மடிக்கணினிகள், 40 கைக்கடிகாரங்கள் மற்றும் 193 மொபைல்கள், வெள்ளி ஆபரணங்கள் மற்றும் மோதிரம், வளையல் ஆகியவையும் அடங்கும். இதுதவிர, பயணிகள் விட்டு சென்ற 9 தாலிகளும் கைப்பற்றப்பட்டு உள்ளன.
டெல்லி மெட்ரோவில் 59 தற்கொலை முயற்சிகள் நடந்துள்ளன. 23 பேர் மரணம் அடைந்துள்ளனர். 3 பேர் பாதுகாக்கப்பட்டு உள்ளனர். 33 பேர் காயம் அடைந்து உள்ளனர்.
இதேபோன்று, பயணிகளிடம் சோதனை செய்ததில் மொத்தம் 75 துப்பாக்கி குண்டுகள், 7 துப்பாக்கிகள் கைப்பற்றப்பட்டன. ரெயிலில் தனியாக பயணித்த 262 குழந்தைகள் மீட்கப்பட்டு, அவர்களுடைய பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.