கொல்கத்தா,
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. அதன்படி இவ்விரு அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டி கொல்கத்தாவில் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 20 ஓவர்கள் முடிவில் 132 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. அதிகபட்சமாக பட்லர் 68 ரன்கள் அடித்தார். இந்தியா தரப்பில் வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகளும், அர்ஷ்தீப்சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்ஷர் படேல் தலா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
பின்னர் 133 ரன் இலக்கை நோக்கி ஆடிய இந்திய அணி 12.5 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 133 ரன்கள் சேர்த்து 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. அதிகபட்சமாக அபிஷேக் சர்மா 79 ரன்கள் அடித்தார்.
இந்த வெற்றிக்கு பந்து வீச்சில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி முக்கிய பங்காற்றிய வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
இந்நிலையில் ஐ.பி.எல். தொடரில் கொல்கத்தா அணிக்காக விளையாடுவதால் இங்குள்ள ஆடுகளத்திற்கு தகுந்தாற்போல் தாம் பழகி விட்டதாக வருண் கூறியுள்ளார். மேலும் பவுன்ஸ் வைத்து இங்கிலாந்து பேட்ஸ்மேன்களுக்கு சவால் கொடுத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:- "இது போன்ற பிட்ச்களில் ஐ.பி.எல். தொடரில் விளையாடி நான் பழகியுள்ளேன். இது போன்ற ஆடுகளங்களில் குறிப்பிட்ட லென்த் எனக்குத் உதவிகரமாக இருக்கும் என்பது எனக்கு தெரியும். பந்தை பேட்ஸ்மேன்கள் அடிக்கும் பகுதிகளிலிருந்து நான் வெளியே வைக்க முயற்சிக்கிறேன். இந்த மைதானத்தில் ஒவ்வொரு ஓவரும் பந்து வீசுவதற்கு சவாலாக இருக்கும். கடைசி ஓவர் எனக்கு பெரிய சவாலாக இருந்தது. ஆனால் கடவுளின் அருளுடன் நான் வெற்றிகரமாக செயல்பட்டேன். பேட்ஸ்மேன்களை பவுன்ஸ் வைத்துதான் வீழ்த்த முடியும். இப்போதும் 10க்கு 7 அளவுக்கே நான் அசத்தியுள்ளதால் இன்னும் உழைக்க வேண்டியது உள்ளது" என்று கூறினார்.