டெல்லி: பிரதமர் மோடி, ஐரோப்பிய ஒன்றிய ஆணைய தலைவர் முன்னிலையில் உயர்மட்ட குழு பேச்சுவார்த்தை

4 hours ago 1

புதுடெல்லி,

ஐரோப்பிய ஒன்றியத்திற்கான ஆணையத்தின் தலைவர் ஊர்சுலா வான் டெர் லெயன் இந்தியாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். இதற்காக அவருடைய தலைமையில் ஒன்றியத்தின் 26 ஆணையாளர்கள் சேர்ந்து ஒரு குழுவாக இந்தியாவுக்கு வருகை தந்துள்ளனர்.

இதன்படி, டெல்லிக்கு நேற்று வந்தடைந்த அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் அவர், டெல்லியில் உள்ள ராஜ்காட் பகுதியில் அமைந்த மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு நேரில் சென்று மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

உலக அளவில் அதிக மக்கள் தொகை கொண்ட நாடான இந்தியாவுடன் வர்த்தக மற்றும் தூதரக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் அவருடைய இந்த பயணம் அமைந்துள்ளது.

இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் இடையே, சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் ஒன்று நீண்டகாலத்திற்கு கையெழுத்திடப்படாமல் உள்ளது. இதனை விரைவுப்படுத்தும் நோக்கில் இரு தரப்பும் முனைப்பில் உள்ளன. இந்த சூழலில், அவருடைய இந்த பயணம் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.

இந்த பயணத்தில் மத்திய வெளிவிவகார மந்திரி ஜெய்சங்கரை அவர் நேற்று சந்தித்து பேசினார். இதனை தொடர்ந்து பிரதமர் மோடியை டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இன்று சந்தித்து பேசினார்.

இதன்பின்னர் பிரதமர் மோடி மற்றும் ஐரோப்பிய ஒன்றிய ஆணையத்தின் தலைவர் ஆகியோர் முன்னிலையில், ஐரோப்பிய ஒன்றிய ஆணைய குழுவினர் மற்றும் இந்திய அதிகாரிகள், தலைநகர் டெல்லியில் உள்ள ஐதராபாத் இல்லத்தில் இன்று நடந்த உயர்மட்ட அளவிலான கூட்டத்தில் கலந்து கொண்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இந்த கூட்டத்தில், மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன், வெளிவிவகார மந்திரி எஸ். ஜெய்சங்கர் மற்றும் பிற மந்திரிகள் கலந்து கொண்டனர். இதற்காக, ஆணையத்தின் உறுப்பினர்கள் ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பப்பட்ட பஸ்சில் பயணம் செய்து ஐதராபாத் இல்லத்திற்கு வந்து சேர்ந்தனர்.

Read Entire Article