புதுடெல்லி,
டெல்லியில் மாசுபாட்டை தடுக்க டெல்லி அரசு செயல்திட்டங்களை வகுத்துள்ளது. இதன்படி கட்டுமான தளங்களில் கட்டுப்பாடு, பட்டாசு வெடிக்க தடை போன்ற அம்சங்கள் முதலாவது செயல்திட்டத்தில் அமல்படுத்தப்பட்டன.
இந்த நிலையில் 2-வது செயல்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது. இதன்படி அரியானா, பஞ்சாப், உத்தரபிரதேசம் மற்றும் ராஜஸ்தான் போன்ற அண்டை மாநிலங்களில் இருந்து டீசல் வாகனங்கள் டெல்லிக்குள் நுழைய வேண்டாம் என டெல்லி சுற்றுச்சூழல் துறை மந்திரி கேட்டுள்ளார். இது குறித்து அந்த மாநிலங்களுக்கு கடிதங்களும் அனுப்பப்பட்டு உள்ளன.
இதைப்போல வாகனப் பெருக்கத்தால் ஏற்படும் மாசுபாட்டை குறைக்க, நகர வீதிகளில் வாகன நிறுத்த கட்டணத்தை (பார்க்கிங்) இருமடங்காக மாநகராட்சி நிர்வாகம் உயர்த்தி உள்ளது. இதனால் தனியார் வாகனங்களின் இயக்கம் பெருமளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தூசு பரவலை கட்டுப்படுத்த செயற்கை மழையை வரவைக்க வேண்டும் என்ற கான்பூர் ஐ.ஐ.டி. மாணவர்களின் யோசனையை செயல்படுத்தவும் மந்திரி விருப்பம் தெரிவித்து இருக்கிறார். இது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.