புதுடெல்லி: டெல்லி தேர்தல் தோல்வியால் ‘இந்தியா’ கூட்டணிக்குள் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் போட்டியிட்ட 70 தொகுதியில் 67ல் டெபாசிட் இழந்தது. ஆம்ஆத்மி மீது காங்கிரஸ் சரமாரியாக குற்றச்சாட்டுகளை வைத்துள்ளது. விரைவில் வரவுள்ள பீகார் தேர்தலில் கூட்டணி என்னாகும்? என்பது கேள்வியாக உள்ளது. டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலில் ஆளுங்கட்சியாக இருந்த ஆம்ஆத்மி, பாஜக இடையே கடுமையான போட்டி இருந்தாலும் கூட, காங்கிரஸ் கட்சியும் தனித்து போட்டியிட்டதால் மும்முனை போட்டி நிலவியது.
நேற்றைய வாக்கு எண்ணிக்கை முடிவில் பாஜக 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியது. ஆனால் மொத்தமுள்ள 70 இடங்களிலும் தனது வேட்பாளர்களை களம் இறக்கிய காங்கிரஸ் 67 தொகுதிகளில் டெபாசிட் இழந்தது. மூன்று காங்கிரஸ் வேட்பாளர்கள் மட்டுமே டெபாசிட் தொகையை பெற தகுதியை பெற்றனர். கஸ்தூரிபா நகரின் அபிஷேக் தத் மட்டுமே இரண்டாவது இடத்தைப் பிடித்த ஒரே காங்கிரஸ் வேட்பாளர் ஆவார். இந்த பட்டியலில் நாங்லோய் ஜாட்டைச் சேர்ந்த ரோஹித் சவுத்ரி மற்றும் பத்லியைச் சேர்ந்த தேவேந்திர யாதவ் ஆகியோரும் அடங்குவர். பெரும்பாலான காங்கிரஸ் வேட்பாளர்கள் பாஜக அல்லது ஆம் ஆத்மிக்கு பின்னால் மூன்றாவது இடத்தைப் பிடித்தனர். ஆனால் சில இடங்களில் காங்கிரஸ் வேட்பாளர்கள் ஏஐஎம்ஐஎம் வேட்பாளர்களுக்கு பின்னால் 4வது இடத்தில் இருந்தனர்.
டெல்லி காங்கிரஸ் மாநிலத் தலைவர் தேவேந்தர் யாதவ் பாத்லி தொகுதியில் மூன்றாவது இடத்தையும், மகிளா காங்கிரஸ் தலைவர் அல்கா லம்பா கல்காஜியில் மூன்றாவது இடத்தையும், முன்னாள் அமைச்சர் ஹாரூன் யூசுப் பல்லிமரனில் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர். மூன்றாவது முறையாக டெல்லி பேரவை தேர்தலில் ஒரு சீட் கூட பெறமுடியவில்லை. ஆனால், காங்கிரஸ் கட்சிக்கு 2.1 சதவீத வாக்குகள் கூடுதலாக 6.39 சதவீதம் கிடைத்தன. அதே 2020 தேர்தலில் 4.3 சதவீத வாக்குகள் கிடைத்தன. காங்கிரஸின் வாக்கு சதவீதம் அதிகரித்ததால், அது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மக்கள் மற்றும் முஸ்லீம் ஆதிக்கம் செலுத்தும் பகுதிகளில் ஆம் ஆத்மி கட்சிக்கு பெரும் இழப்பு ஏற்பட்டது. அந்த தொகுதிகளில் காங்கிரஸ் அதிக வாக்குகளை பெற்றது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மிக்கு 10 சதவீதம் வாக்கு குறைந்துள்ளது. இந்த தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 43.19 சதவீத வாக்குகளைப் பெற்றது; அதே 2020 தேர்தலில் 53.6 சதவீத வாக்குகளைப் பெற்றது.
கடைசியாக டெல்லியில் காங்கிரஸ் ஆட்சியமைத்த 2008ம் ஆண்டில், காங்கிரசின் வாக்கு சதவீதம் 40.31 சதவீதமாக இருந்தது. அதே 2013ல் 24.55 சதவீதமாகவும், 2015ல் 9.7 சதவீதமாகவும், 2020ல் 4.3 சதவீதமாகவும் குறைந்தது. காங்கிரசின் வாக்கு சதவீதம் வெகுவாக குறைவதற்கு காரணம் ஆம் ஆத்மி கட்சி தான்; கடந்த 2013ல் 29.6 சதவீதமும், 2015ல் 54.6 சதவீதமும், 2020ல் 53.6 சதவீதமும் ஆம்ஆத்மி பெற்றது. இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி சுமார் 5.8 லட்சம் வாக்குகளைப் பெற்றது. அதே 2020ம் ஆண்டில் 3.95 லட்சம் வாக்குகளை பெற்றது. 2015ல் 8.67 லட்சம் வாக்குகளும், 2013ல் 1.93 கோடி வாக்குகளும் பெற்றது. அதே 2008ம் ஆண்டில் 2.49 கோடி வாக்குகளைப் பெற்று ஆட்சியமைத்தது. காங்கிரஸ் கட்சியின் தொடர் வீழ்ச்சியானது, ‘இந்தியா’ கூட்டணியின் ஒற்றுமையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்கின்றனர். ஏனெனில் காங்கிரஸ் கட்சி ஏற்கனவே ‘இந்தியா’ கூட்டணியில் இருந்து சற்று விலகியே இருக்கிறது. டெல்லி தேர்தலில் கூட ஆம்ஆத்மிக்கு சமாஜ்வாதி கட்சி, திரிணாமுல் கட்சி போன்றவை ஆதரவளித்தன. மேலும், அக்கட்சிகளின் மூத்த தலைவர்கள் ஆம்ஆத்மிக்கு ஆதரவாக பிரசாரம் செய்தனர்.
டெல்லி தேர்தல் முடிந்துள்ள நிலையில் விரைவில் பீகாரில் சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளதால், ‘இந்தியா’ கூட்டணியின் ஒற்றுமை தொடருமா? என்பதும் கேள்வியாக உள்ளது. ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் சில கட்சிகள், தற்போது காங்கிரசுக்கு அறிவுரை கூறி வருகின்றன. ஆனால் காங்கிரசோ டெல்லி தோல்விக்கு ஆம்ஆத்மி தான் முழு பொறுப்பு என்று கூறி வருகிறது. எப்படியாகிலும் ெடல்லியில் ஒரு இடத்தை கூட பெறமுடியாத காங்கிரஸ் நிலைமை சற்று கவலையளிக்கக் கூடிய வகையில் தான் உள்ளது. மக்களவை தேர்தலில் எழுச்சியுடன் காணப்பட்ட காங்கிரஸ், மக்களவை தேர்தலுக்கு பின்னர் நடந்த அரியானா, மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் பின்னடைவை சந்தித்து. காங்கிரசின் மோசமான செயல்திறனால் எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையும் பாதிக்கப்பட்டதாக திரிணாமுல் தலைவர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
ஆம்ஆத்மியை சிதைத்த சுவாதி மாலிவால்: டெல்லி தேர்தலில் ஆம்ஆத்மி கட்சி படுதோல்வியை சந்தித்ததற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், அவற்றில் கெஜ்ரிவாலின் பிம்பத்தை உடைத்து நொறுக்கியதில் முக்கியப் பங்காற்றியது அக்கட்சியின் மாநிலங்களவை எம்பியான சுவாதி மாலிவாலை சேரும். இதற்கு காரணம் டெல்லி முதல்வராக கெஜ்ரிவால் இருந்த போது, அவரது வீட்டில் இருந்த கெஜ்ரிவாலின் உதவியாளரால் சுவாதி மாலிவால் தாக்கப்பட்டார். இவ்விசயத்தில் தனது உதவியாளரை கெஜ்ரிவால் கண்டும் காணாமல் கண்டிக்காமல் விட்டுவிட்டார். அதனை பழி தீர்க்கவே, இந்த தேர்தலில் ஆம்ஆத்மி எம்பியாக இருந்து கொண்டும் டெல்லி அரசுக்கு எதிராகவும், கெஜ்ரிவாலுக்கு எதிராகவும் மறைமுகமாக உள்ளடி வேலைகளை சுவாதி மாலிவால் செய்தார். தற்போது டெல்லி தேர்தலில் ஆம்ஆத்மி தோல்வியடைந்ததால், தனது சமூக வலைதளபக்கத்தில் மகாபாரதத்தில் திரவுபதியின் சேலை உருவும் போது, கிருஷ்ணர் திரவுபதியின் மானத்தை காப்பாற்றும் காட்சியை அடிப்படையாக புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படத்திற்கு எவ்வித தலைப்பும் வைக்கவில்லை. இந்த புகைப்படத்தின் மூலம் கெஜ்ரிவாலுக்கு ஏதோ மெசேஜ் கொடுத்துள்ளார் என்கின்றனர். தேர்தல் நேரத்தில் நகரப்பகுதியில் இருக்கும் குப்பை கழிவுகள், வீடுகளுக்கு அசுத்தமான நீர் வழங்கல் பிரச்னையை போன்றவற்றை பார்வையிட்டு, அதனை புகைப்படங்களாக எடுத்து மறைமுகமாக கெஜ்ரிவாலுக்கு நெருக்கடி கொடுத்தார். ஒரு கட்டத்தில் சாலையில் கிடந்த குப்பைகளை அள்ளி, கெஜ்ரிவாலின் வீட்டிற்கு வெளியே சுவாதி மாலிவால் கொட்டினார். இதையடுத்து அவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். கெஜ்ரிவாலுக்கு பலவிதங்களில் சுவாதி மாலிவால் நெருக்கடி கொடுத்திருந்தாலும், அவர் பாஜகவில் சேரவில்லை. ஆனால் சுவாதி மாலிவாலில் கெஜ்ரிவால் எதிர்ப்பு பிரசாரம் பாஜகவுக்கு சாதகமானது என்றே கூறுகின்றனர்.
மோடி பேசும்போது சரிந்த தொண்டர்: ேநற்றிரவு டெல்லி பாஜக தலைமையகத்திற்கு வந்த பிரதமர் மோடி, டெல்லி சட்டமன்றத் தேர்தலில் கட்சியின் வெற்றி கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். அப்போது தேர்தல் வெற்றிக்கு காரணமான டெல்லி மக்களுக்கும் பாஜக தொண்டர்களுக்கும் நன்றி தெரிவித்தார். மோடி பேசிக் கொண்டிருக்கும் போது, கூட்டத்தில் இருந்த ெதாண்டர் ஒருவரின் உடல்நிலை மோசமடைந்ததால் அவர் மயக்கமடைந்தார். அதனை கவனித்த மோடி, தனது உரையை சிறிது நேரம் நிறுத்திக் கொண்டார். அப்போது மோடி கூறுகையில், ‘அவரை பாருங்கள்; மருத்துவரிடம் அழைத்து செல்லுங்கள்; அவருக்கு தண்ணீர் கொடுங்கள். உடனடியாக அவரை கவனித்துக் கொள்ளுங்கள்’ என்றார். பின்னர் அங்கிருந்த நிர்வாகிகள் சிலர், பாதிக்கப்பட்ட தொண்டரை அங்கிருந்து அழைத்து சென்ற பின்னர் தான் மோடி தனது உரையை தொடங்கினார். முன்னதாக ராஜஸ்தானிலும், உத்தரப்பிரதேசத்திலும், அரியானாவிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
The post டெல்லி தோல்வியால் ‘இந்தியா’ கூட்டணிக்குள் சலசலப்பு; போட்டியிட்ட 70 தொகுதியில் 67ல் டெபாசிட் இழந்த காங்கிரஸ்: ஆம்ஆத்மி மீது சரமாரி குற்றச்சாட்டு; அடுத்து பீகார் தேர்தல் என்னாகும்? appeared first on Dinakaran.