புதுடெல்லி: டெல்லி தேர்தல் முடிவுக்கு முன்பே ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தின் அடிப்படையில் 16 ஆம்ஆத்மி வேட்பாளர்களுக்கு ரூ240 கோடி லஞ்சம்? கொடுக்க பேரம் பேசப்பட்டதாக கெஜ்ரிவால் கூறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் ஊழல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணையை தொடங்கி உள்ளனர். டெல்லி சட்டப்பேரவைத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை இன்று நடைபெற்று வரும் நிலையில், ‘ஆபரேஷன் தாமரை’ திட்டத்தை பாஜக செயல்படுத்திவிட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வரும்நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் முதல்வருமான கெஜ்ரிவால் அளித்த பேட்டி ஒன்றில், ‘ஆம் ஆத்மி வேட்பாளர்கள் கட்சி மாறினால் அமைச்சர் பதவிகளும், தலா ரூ.15 கோடியும் தருவதாக பாஜகவினர் வாக்குறுதி அளித்துள்ளனர்.
எங்கள் கட்சி வேட்பாளர்களை பாஜக விலை கொடுத்து வாங்க முற்பட்டது’ என்று பரபரப்பு குற்றச்சாட்டை தெரிவித்தார். ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி சஞ்சய் சிங் அளித்த பேட்டி ஒன்றில், ‘சுல்தான்பூர் மஜ்ராவைச் சேர்ந்த ஆம் ஆத்மி வேட்பாளர் மற்றும் டெல்லி அமைச்சர் முகேஷ் அஹ்லாவத், அத்துடன் ஆம் ஆத்மியின் தற்போதைய எம்எல்ஏவும் துவாரகாவைச் சேர்ந்த வேட்பாளருமான வினய் மிஸ்ரா ஆகியோரிடம், கட்சி மாறினால் அமைச்சர் பதவிகளும், தலா ரூ.15 கோடியும் தருவதாக பாஜக தலைவர்கள் வாக்குறுதி அளித்துள்ளனர்’ என்று கூறினார். கெஜ்ரிவால், சஞ்சய் சிங் ஆகியோரின் குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க ஊழல் தடுப்பு பிரிவுக்கு (ஏசிபி) டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா உத்தரவிட்டார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேர தனது எம்எல்ஏக்களுக்கு பாஜக லஞ்சம் தருவதாக தெரிவித்த ஆம் ஆத்மியின் குற்றஞ்சாட்டின் உண்மையை நிலைநாட்ட ஊழல் தடுப்பு பிரிவு முழுமையான விசாரணை நடத்த வேண்டும்’ என்று டெல்லி தலைமை செயலருக்கு உத்தரவிட்டார். முன்னதாக டெல்லி பாஜக பொதுச் செயலர் விஷ்ணு மிட்டல், துணை நிலை ஆளுநரிடம் அளித்த புகார் மனுவின் அடிப்படையில் இந்த உத்தரவை துணை நிலை ஆளுநர் பிறப்பித்தார். அதன் தொடர்ச்சியாக நேற்று கெஜ்ரிவாலின் இல்லத்துக்கு ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் விரைந்தனர். ஆனால், கட்சி தொண்டர்கள் கெஜ்ரிவாலின் வீட்டுக்குள் ஊழல் தடுப்பு பிரிவு குழுவை அனுமதிக்கவில்லை. இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இது தொடர்பாக ஆம் ஆத்மி கட்சியின் சட்டப் பிரிவுத் தலைவர் சஞ்சீவ் நாசியார் கூறுகையில், ‘ஊழல் தடுப்பு பிரிவு குழுவிடம் விசாரணைக்கான ஆணை இல்லை. அவர்கள் ஏன் இங்கு வந்திருக்கிறார்கள் என்று நாங்கள் கேட்டபோது, கெஜ்ரிவாலிடம் இருந்து புகார் பெறுவதற்காக அனுப்பப்பட்டதாக அவர்கள் கூறினர். ஆனால், ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங் புகார் அளிக்க அலுவலகம் சென்றுவிட்டார். அவர்கள் தொலைபேசியில் உத்தரவுகளைக் கேட்டு செயல்படுகிறார்கள். இது பாஜகவின் அரசியல் தந்திரம்’ என்றார். கெஜ்ரிவாலின் வீட்டிற்குள் அதிகாரிகளை செல்ல அனுமதிக்காததால், அவர்கள் மீண்டும் திரும்பி செல்ல வேண்டிய சூழல் ஏற்பட்டது. இதுதொடர்பாக ஊழல் தடுப்பு பிரிவு வெளியிட்ட நோட்டீசில், ‘ஆம்ஆத்மி கட்சி வேட்பாளர்களை விலைக்கு வாங்குவதாக நீங்களும் (கெஜ்ரிவால்), உங்களது கட்சியினரும் பொதுவெளியில் பேசி வருகின்றனர்.
இதுகுறித்து துணை நிலை ஆளுநர் விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளார். தங்களது குற்றச்சாட்டுகள் ெதாடர்பான தொலைபேசி எண்கள், அதுதொடர்பான ஆதாரங்கள் மற்றும் விளக்கங்களை எங்களிடம் சமர்பிக்க வேண்டும். அப்போது தான் தங்களது குற்றச்சாட்டு குறித்து நடவடிக்கை எடுக்க முடியும். தாங்கள் கூறிய குற்றச்சாட்டுகள் பொய்யானவை என்று கண்டறியப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்’ என்று குறிப்பிட்டு உள்ளது. டெல்லி சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாவதற்கு முன்னதாக 16 ஆம் ஆத்மி வேட்பாளர்களுக்கு, தலா ரூ. 15 கோடி வீதம் மொத்தம் ரூ. 240 கோடி லஞ்சம் கொடுக்க பாஜக முயன்றதாக ஆம்ஆத்மி தலைவர்களால் எழுந்த குற்றச்சாட்டுகளால், டெல்லி ஊழல் தடுப்பு பிரிவு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு சட்டப்பூர்வ நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இன்றைய தேர்தல் முடிவுகளின் அடிப்படையிலும், எந்த கட்சி டெல்லியில் ஆட்சியமைக்கும் என்பதை பொருத்தே, ஊழல் தடுப்பு பிரிவின் சட்டப்பூர்வமான நடவடிக்கைகள் இருக்கும் என்றும், அதுபோன்ற நடவடிக்கைகள் கெஜ்ரிவாலுக்கு எதிராக அமையலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
The post டெல்லி தேர்தல் முடிவுக்கு முன்பே ‘ஆபரேஷன் தாமரை’ 16 ஆம்ஆத்மி வேட்பாளர்களுக்கு ரூ240 கோடி லஞ்சம்?.. கெஜ்ரவாலின் குற்றச்சாட்டால் ஊழல் தடுப்பு பிரிவு விசாரணை appeared first on Dinakaran.