டெல்லி தேர்தலில் வெற்றி பெற்று பாஜ ஆட்சிக்கு வந்தால் குடிசைகளை அழித்திடும்: அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் பதிலடி

3 weeks ago 4

புதுடெல்லி: “டெல்லியில் பாஜ ஆட்சிக்கு வந்தால் குடிசைப்பகுதிகளை அழித்து விடும்” என அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் பதிலடி கொடுத்துள்ளார். டெல்லியில் மொத்தமுள்ள 70 பேரவை தொகுதிகளுக்கு அடுத்த மாதம் 5ம் தேதி ஒரேகட்டமாக தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று முன்தினம் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா, “டெல்லியில் கடந்த 10 ஆண்டுகால ஆம் ஆத்மி ஆட்சி குடிசைப் பகுதி மக்களுக்கு துரோகம் இழைத்து விட்டது. டெல்லி பேரவை தேர்தலில் பாஜ வெற்றி பெற்றால் குடிசைப் பகுதியில் வசிக்கும் அனைவருக்கும் வீடுகள் கட்டி கொடுக்கப்படும்” என தெரிவித்திருந்தார். இந்நிலையில், நேற்று டெல்லி ஷாகுர் பஸ்தி பகுதியில் டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் பேசுகையில், “தேர்தலுக்கு முன் பாஜவினர் குடிசைப்பகுதி மக்களின் வாக்குகளை விரும்புவார்கள்.

தேர்தல் முடிந்த பின் உங்கள் நிலங்களை விரும்புவார்கள். குடிசைப்பகுதி மக்களின் நலன்களை விட அவர்களின் நிலங்களை அபகரிப்பதில்தான் பாஜ முக்கிய கவனம் செலுத்தும். டெல்லியில் தற்போது குடிசைவாசிகளின் தேவைகளை நிறைவேற்றாமல் அவர்கள் ஆக்கிரமித்துள்ள நிலங்களை கையகப்படுத்த பாஜ திட்டமிட்டுள்ளது. டெல்லி குடிசைவாசிகள் மீதான அனைத்து வழக்குகளையும் பாஜ வாபஸ் பெற வேண்டும். மேலும் அங்கிருந்து இடம்பெயர்ந்தவர்களை 24 மணி நேரத்துக்குள் மீண்டும் குடியமர்த்த பாஜ ஒத்து கொண்டால் பேரவை தேர்தலில் நான் போட்டியிட மாட்டேன். அவ்வாறு பாஜ செய்யவில்லையென்றால் நான் தேர்தலில் போட்டியிட்டு குடிசைவாசிகளுக்கு கேடயமாக செயல்படுவேன்” என அமித் ஷாவுக்கு சவால் விடுத்தார்.

 

The post டெல்லி தேர்தலில் வெற்றி பெற்று பாஜ ஆட்சிக்கு வந்தால் குடிசைகளை அழித்திடும்: அமித்ஷாவுக்கு கெஜ்ரிவால் பதிலடி appeared first on Dinakaran.

Read Entire Article