
புதுடெல்லி,
டெல்லி சட்டசபையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சட்டசபை கூட்டம் தொடங்கி நடந்தது. ஆனால், முதல் நாளிலேயே ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மிக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. இரு கட்சி உறுப்பினர்கள் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி மற்றும் டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான அதிஷி கூறும்போது, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன என குற்றச்சாட்டாக கூறினார். தொடர்ந்து அக்கட்சி உறுப்பினர்கள் அவையில் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர்.
இதற்கு பதிலடியாக பா.ஜ.க. உறுப்பினர்களும் அவையில் எழுந்து நின்று கோஷம் எழுப்பினர். இதனை தொடர்ந்து, கோஷம் எழுப்பிய ஆம் ஆத்மி கட்சியை சபாநாயகர் கடிந்து கொண்டார். அவர் பேசும்போது, பொறுப்பற்ற முறையில் எதிர்க்கட்சியினர் நடந்து கொள்கிறார்கள். உங்களுக்கு நேரம் கிடைக்கும்.
அதனால், உங்களுடைய இடங்களுக்கு சென்று அமருங்கள். அவையை நடத்த விடுங்கள் என கேட்டு கொண்டார். அவைக்கு இடையூறு ஏற்படுத்தும் நோக்கத்திலேயே எதிர்க்கட்சியினர் வந்துள்ளனர் என கூறியதுடன், அவையின் கண்ணியத்திற்கு ஊறு ஏற்படுத்தும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது என்றும் கூறினார்.
இதனை ஓர் அரசியல் தளம் போல் ஆக்கக்கூடாது என கடுமையாக கூறியதுடன், அவையை சுமுக முறையில் நடத்த எதிர்க்கட்சிகள் விரும்பவில்லை என்றும் கூறினார். இதன்பின்னர் 15 நிமிடங்களுக்கு அவை ஒத்தி வைக்கப்பட்டது.
அப்போது, அவைக்கு வெளியே பேசிய அதிஷி, அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன என குற்றச்சாட்டாக கூறினார். இதேபோன்று, பா.ஜ.க.வின் மகிளா சம்மான் யோஜனா திட்டத்துடன் தொடர்புடைய நிறைவேற்றப்படாத வாக்குறுதியை சுட்டிக்காட்டி குற்றச்சாட்டாக கூறினார்.
எனினும் எந்த புகைப்படமும் நீக்கப்படவில்லை என பா.ஜ.க. எம்.எல்.ஏ. தர்வீந்தர் சிங் மார்வா கூறியுள்ளார். கெஜ்ரிவால் ஒருவரே பொய் கூறுகிறார் என நாங்கள் நினைத்தோம். ஆனால், அதிஷி அவரை மிஞ்சி விட்டார் என்று பதிலுக்கு குற்றச்சாட்டாக கூறினார்.