டெல்லி சட்டசபை தேர்தல்: பா.ஜ.க. வெற்றிக்கு டி.டி.வி. தினகரன், ஜி.கே. வாசன் வாழ்த்து

2 hours ago 1

சென்னை,

70 உறுப்பினர்களை கொண்ட டெல்லி சட்டசபைக்கான தேர்தல் கடந்த 5-ந்தேதி நடந்து முடிந்தது. இந்த தேர்தலில், ஆம் ஆத்மி, பா.ஜ.க. மற்றும் காங்கிரஸ் என 3 முக்கிய கட்சிகள் மும்முனை போட்டியை ஏற்படுத்தி இருந்தன. ஆம் ஆத்மி வெற்றி பெற்றால் அது ஹாட்ரிக் வெற்றியாக இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

இதனை தொடர்ந்து வாக்கு எண்ணிக்கை இன்று காலை 8 மணியளவில் தொடங்கியது. தொடக்கம் முதலே, பா.ஜ.க. பல்வேறு இடங்களில் முன்னிலை பெற்றது. ஆம் ஆத்மி கட்சி பின்னடைவை சந்தித்தது. இது அக்கட்சியினருக்கு பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், டெல்லி சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையில் பிற்பகல் 6.30 மணியளவில் வெளியான தகவலின்படி, பா.ஜ.க. 47 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. தவிரவும், ஓரிடத்தில் முன்னிலையில் உள்ளது. ஆம் ஆத்மி கட்சி 22 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி சட்டசபை தேர்தலில், பெரும்பான்மை பெற 36 இடங்களில் வெற்றி பெற வேண்டும். பா.ஜ.க. 47 இடங்களை கைப்பற்றி உள்ளது. இதனால், அக்கட்சி ஏறக்குறைய 27 ஆண்டுகளுக்கு பின்னர் டெல்லியில் ஆட்சியமைக்க உள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் ஆட்சியை கைப்பற்றியுள்ள பா.ஜ.க.வுக்கு அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக டி.டி.வி. தினகரன் வெளியிட்டுள்ள பதிவில், "டெல்லி சட்டமன்றத் தேர்தலில் வெற்றி வாகை சூடியிருக்கும் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கும், அதன் தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாரதப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான நல்லாட்சிக்கு நற்சான்று அளிக்கும் வகையில் தலைநகர் டெல்லியில் மக்களின் பேராதரவோடு கிடைத்திருக்கும் இந்த மாபெரும் வெற்றி நாடு முழுவதும் தொடர வாழ்த்தி மகிழ்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

ஜி.கே. வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தலைநகர் டெல்லியில் நடந்த சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி அறுதி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க இருப்பது மிகுந்த மகிழ்ச்சிக்குரியது.

இருபத்தியேழு ஆண்டுகளுக்குப் பிறகு டெல்லியில் ஆட்சி அமைப்பது மரியாதைக்குரிய பாரத பிரதமருக்கும், மத்திய உள்துறை மந்திரிக்கும் கிடைத்த மிகப் பெரிய வெற்றியாகும். நல்லாட்சிக்கும், ஊழலற்ற ஆட்சிக்கும் மக்கள் என்றும் துணை நிற்பார்கள் என்பதை இந்த பெரும் வெற்றி எடுத்துக்காட்டுகிறது.

பாரத பிரதமருக்கும், இணைந்து பணியாற்றிய உள்துறை மந்திரிக்கும், அகில இந்திய பா.ஜ.க.வின் தலைவர் ஜே.பி. நட்டாவுக்கும் பாராட்டுகளையும், வாழ்த்துக்களையும் தமிழ் மாநில காங்கிரஸ் சார்பாக தெரிவித்துக்கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

Read Entire Article