
புதுடெல்லி,
டெல்லியில் உளவு துறை பிரிவில் பாதுகாப்பு உதவி செயல் அதிகாரியாக பணியாற்றி வருபவர் மணீஷ் பாண்டே. இந்நிலையில், பணி முடிந்து ஆர்.கே. ஆஷ்ரம் மார்க் பகுதியில் போக்குவரத்து சிக்னலில் நள்ளிரவு 1 மணியளவில் ஆட்டோவுக்காக மணீஷ் காத்திருந்து உள்ளார்.
அப்போது, அக்தர் ராஜா (வயது 41) மற்றும் குலாம் ரசா (வயது 25) ஆகிய இருவர் அவரை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டியுள்ளனர். அவரிடம் இருந்து, முக்கிய ஆவணங்கள் மற்றும் ரூ.1,500 பணம் உள்ளிட்டவற்றை பறித்து விட்டு தப்பி விட்டனர்.
இதுபற்றி மந்திர் மார்க் காவல் நிலையத்தில் புதிய குற்றவியல் சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து, போலீசார் விசாரித்தனர். சி.சி.டி.வி. காட்சிகளை ஆய்வு செய்ததில், சந்தேகத்திற்குரிய 2 பேரை அடையாளம் கண்டனர். விசாரணையில், ஆரம் பாக் பகுதியில் அக்தர் கைது செய்யப்பட்டார். தொடர்ந்து, அவருடைய கூட்டாளியான குலாம் கைது செய்யப்பட்டார்.
அவர்களிடம் இருந்து மணீஷ் பாண்டேவின் ஆதார் அட்டை, கிரெடிட் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் ரூ.725 பணம், குற்றத்திற்கு பயன்படுத்திய கத்தி மற்றும் வழிப்பறியின்போது பயன்படுத்தப்பட்ட ஆட்டோ ஆகியவற்றை போலீசார் கைப்பற்றினர். அவர்கள் இருவரும் பீகார் மாநிலத்தின் கிஷன்கஞ்ச் மாவட்டத்தில் இருந்து வந்து டெல்லியில் ஆட்டோ ஓட்டுநர்களாக பணியாற்றி வந்துள்ளனர். தொடர்ந்து இதுபற்றி விசாரணை நடந்து வருகிறது.