
பெங்களூரு,
ஐ.பி.எல். தொடரின் 18-வது சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இதில் பெங்களூருவில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் அக்சர் படேல் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
அதன்படி, முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 163 ரன்கள் எடுத்தது. பில் சால்ட், டிம் டேவிட் தலா 37 ரன்கள் எடுத்தனர். ரஜத் படிதார் 25 ரன்னும், விராட் கோலி 22 ரன்னும் எடுத்தனர்.இதையடுத்து, 164 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி கேப்பிட்டல்ஸ் 17.5 ஓவரில் 169 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
இந்த நிலையில் இந்த போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு என்ன காரணம் என்பதை பெங்களூரு கேப்டன் ரஜத் படிதார் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது,
விக்கெட் மிகவும் வித்தியாசமாக இருந்தது என்று நினைக்கிறேன், இது ஒரு நல்ல பேட்டிங் விக்கெட் என்று நினைத்தோம், ஆனால் நாங்கள் நன்றாக பேட்டிங் செய்யவில்லை. எங்களிடம் நல்ல பேட்டிங் வரிசை உள்ளது, ஆனால் நிலைமையை மதிப்பிட வேண்டும். , பவர்பிளேயில் எங்களது பந்துவீச்சு நன்றாக இருந்தது .நல்ல கிரிக்கெட்டை விளையாட விரும்புகிறோம் . என தெரிவித்தார் .