
சென்னை,
சென்னை போன்ற பெரு நகரங்களில் ஸ்விக்கி, ஸ்மோட்டோ போன்ற உணவு டெலிவரி சேவை செய்யும் நிறுவனங்கள் 24 மணி நேர உணவு டெலிவரி சேவையை வழங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களில், உணவு டெலிவரி செய்யும் வேலையில், ஆயிரக்கணக்கான ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த ஊழியர்கள் மழை, வெயில் போன்ற கடினமான சூழல்களில் கூட டெலிவரி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.
இந்த டெலிவரி ஊழியர்களில் 10 சதவ்வீதம் பேர் பெண்கள் ஆவார்கள். இந்த ஊழியர்களுக்கு குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் கூட இல்லை என்ற குற்றச்சாட்டு நீண்ட காலமாகவே உள்ளது. மேலும், ஓய்வுக்கு எடுக்க இடமில்லாமல், சாலை ஓரங்களில் கூடுகிறார்கள்.
இந்நிலையில், இந்த ஊழியர்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னையின் முக்கிய சாலைகளில்,ஏசி ஓய்வறையை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக மாநகர ஆணையர் குமரகுருபன் தெரிவித்துள்ளார். 600 சதுரடி பரப்பளவில் அமையவுள்ள இந்த ஓய்வறையில், கழிவறை, குடிநீர், செல்போன் சார்ஜ் செய்யும் வசதிகள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சோதனை அடிப்படையில், அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தி. நகர் போன்ற பகுதிகளில் குளிரூட்டப்பட்ட ஓய்வு அறைகள் அமைக்கப்படவுள்ளன.