'டெக்ஸ்டர்' திரைப்பட விமர்சனம்

2 days ago 2

சென்னை,

இயக்குனர் சூரியன் ஜி இயக்கத்தில் ராஜீவ் கோவிந்த் கதாநாயகனாக நடித்துள்ள படம் 'டெக்ஸ்டர்'. இப்படம் கிரைம் திரில்லர் கதையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் யுக்தா பெர்வி கதாநாயகியாக நடித்துள்ளார். மேலும் ஹரிஷ் பெராடி, அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். எஸ்.வி. பிரகாஷ் தயாரித்த இப்படத்திற்கு ஸ்ரீநாத் விஜய் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில், சூரியன் ஜி இயக்கிய 'டெக்ஸ்டர்' படம் எப்படி இருக்கிறது என்பதை காண்போம்.

நாயகன் ராஜீவ் கோவிந்த் தனது காதலியை யாரோ கடத்தி கொலை செய்துவிட அந்த துக்கத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார். பின்னர் பள்ளியில் தன்னுடன் படித்த தோழியை சந்திக்கிறார். அந்த தோழியும் காதலியை போலவே கடத்தப்படுகிறார். கடத்தியவனை ராஜீவ் கோவிந்த் தேடும்போது ஒரு சைக்கோ என்பது தெரிய வருகிறது. அவன் எப்படி சைக்கோவாக மாறினான்? அவனிடம் இருந்து ராஜீவ் கோவிந்தும், தோழியும் தப்பினார்களா? என்பது மீதி கதை.

 ராஜீவ் கோவிந்த் கதாபாத்திரத்தின் தன்மையை உள்வாங்கி நடித்து இருக்கிறார். விரும்பிய பெண்ணுடன் காதலில் திளைப்பது, காதலியை இழந்த பிறகு மதுபோதைக்கு அடிமையாவது, தோழியை சைக்கோவிடம் இருந்து காப்பாற்ற போராடுவது என்று அனைத்து உணர்வுகளையும் கச்சிதமாக வெளிப்படுத்தி கதைக்கு வலிமை சேர்த்து இருப்பது சிறப்பு.

யுக்தா பெர்வி காதல் காட்சிகளில் நெருக்கம் காட்டி இளமை விருந்து படைக்கிறார். கவர்ச்சியிலும் தாராளம். சித்தாரா விஜயன், பள்ளி பருவ நண்பன் துயரத்தில் பங்கெடுத்து ஆறுதலாக இருப்பது, சைக்கோ கொலைகாரனிடம் சிக்கி ஜீவ மரண போராட்டம் நடத்துவது என்று அசத்தல் நடிப்பை வழங்கி உள்ளார். சைக்கோவாக வரும் அபிஷேக் ஜோசப் ஜார்ஜ் கதைக்கு தேவையான மிரட்டல் நடிப்பை கொடுத்துள்ளார். ஹரிஷ் பெராடி, அஷ்ரப் குருக்கள், சோபா பிரியா ஆகியோரும் அவரவர் கதாபாத்திரங்களில் நிறைவு. ஆரம்ப காட்சிகளில் இன்னும் வலுசேர்த்து இருக்கலாம்.

ஆதித்ய கோவிந்தராஜ் ஒளிப்பதிவு பலம். ஸ்ரீநாத் விஜய் இசையில், 'யாரோ யாரிவனோ' 'இனி என்ன ஆகிடுமோ' பாடல்கள் மனதில் நிற்கின்றன. கிரைம் திரில்லர் கதையை சஸ்பென்ஸ் திருப்பங்களுடன் விறுவிறுப்பாக படமாக்கி கவனம் பெறுகிறார் இயக்குனர் சூரியன் ஜி.

Read Entire Article