
நியூயார்க்,
அமெரிக்காவின் தெற்கு-மத்திய டெக்சாஸ் மாகாணத்தில் கடந்த சில நாட்களாக இடி, மின்னலுடன் கூடிய தொடர் மழை பெய்து வருகிறது. அதனுடன் பலத்த காற்றுடன் கூடிய புயலும் வீசி வருகிறது. இதனால், பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டது. குவாடலூப் ஆற்றில் வெள்ளம் ஏற்பட்டு, நகரங்களுக்குள் புகுந்தது. இதில் பலர் சிக்கி கொண்டனர்.
பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டு உள்ளது. தொடர் மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் சிக்கி பலர் பலியானார்கள். இந்நிலையில், 700-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கோடை கால முகாமுக்கு சென்றுள்ளனர். அவர்களில், 20-க்கும் மேற்பட்ட மாணவிகள் காணாமல் போயுள்ளனர். அவர்களை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
எனினும், அவர்கள் தொலைந்து போய் விட்டார்கள் என அர்த்தமில்லை. அவர்கள் மரங்களில் பாதுகாப்பாக இருக்கலாம். அல்லது தொடர்பு கொள்ள முடியாத இடங்களில் இருக்க கூடும் என கூறப்படுகிறது.
இதனையடுத்து ஹெலிகாப்டர்கள், படகுகள் மற்றும் டிரோன்கள் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி, மரங்களில் சிக்கி நிற்பவர்கள், முகாம்களில் பரிதவித்து நிற்பவர்கள் மற்றும் காணாமல் போனவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டனர்.
இதுவரை 32 பேர் உயிரிழந்து உள்ளனர். அவர்களில் 14 பேர் குழந்தைகள் என தெரிய வந்துள்ளது. 27 பேர் காணாமல் போயுள்ளனர். அவர்கள் அனைவரையும் மீட்கும் வரை எங்கள் பணி ஓயாது என டெக்சாஸ் மாகாணத்தின் நெருக்கடி மேலாண்மை துறையின் தலைவர் நிம் கிட் கூறியுள்ளார். இதுவரை 850 பேர் மீட்கப்பட்டு உள்ளனர்.
இதுபற்றி ஜனாதிபதி டிரம்ப் கூறும்போது, நானும் மெலனியாவும், இந்த பயங்கர பாதிப்பில் சிக்கிய குடும்பத்தினர் அனைவருக்காகவும் வேண்டி கொள்கிறோம் என அவருடைய சமூக ஊடக பதிவில் தெரிவித்து உள்ளார்.
எனினும், கனமழை மற்றும் வெள்ளம் நீடிக்கும் என தேசிய வானிலை ஆய்வு மையத்தின் ஜேசன் ருன்யென் கூறியுள்ளார். அது நேற்றிரவு மட்டுமின்றி இன்று காலையும் தொடரும் என அவர் கூறியுள்ளார். 20-க்கும் மேற்பட்ட மீட்பு பணியாளர்கள் மற்றும் அவசரகால பொறுப்பு படையினர், காணாமல் போனவர்களை தேடும் பணியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.