
திருவண்ணாமலை,
திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அண்ணாமலையான் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். வழக்கமாக ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்கள் மற்றும் விஷேச நாட்களில் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் காணப்படும்.
அந்த வகையில், இன்று வார விடுமுறை நாளையொட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் அதிகாலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள், குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்தவர்கள் வருகை தந்திருந்தனர்.
இதன் காரணமாக திருவண்ணாமலையில் உள்ள பிரதான சாலைகளில் இன்று கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. குறிப்பாக மத்திய பேருந்து நிலையம், அண்ணாமலையார் கோவிலை சுற்றியுள்ள மாடவீதி பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்தனர்.
இன்று அதிகாலை முதல் திருவண்ணாலையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்த நிலையில், அவர்கள் நீண்ட வரிசையில் சுமார் 3 மணி நேரத்துக்கும் மேலாக காத்திருந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர். விடுமுறை நாட்களில் திருவண்ணாமலைக்கு வருகை தரும் பக்தர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.