டெக்சாஸ்: அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ‘ஹில் கண்ட்ரி’ பகுதியானது புகழ்பெற்ற சுற்றுலாத் தலமாகும். அதே சமயம், இந்தப் பகுதி திடீரென ஏற்படும் பெரும் வெள்ளப்பெருக்குகளுக்கும் பெயர் போனது. இதன் காரணமாக, கோடை விடுமுறையைக் கழிக்கவும், இங்குள்ள பல்வேறு முகாம்களில் கலந்துகொள்ளவும் ஏராளமான குடும்பங்களும், சிறுவர் சிறுமிகளும் இப்பகுதிக்கு வருவது வழக்கம். இந்தச் சூழலில், நேற்று மட்டும் பல மாதங்களுக்கு பெய்ய வேண்டிய பேய் மழை சில மணி நேரங்களிலேயே கொட்டித் தீர்த்ததால், குவாடலூப் ஆற்றில் வரலாறு காணாத வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இந்த கோர வெள்ளத்தில் சிக்கி இதுவரை 24 பேர் உயிரிழந்தனர். அங்குள்ள கோடைக்கால முகாமில் கலந்துகொண்ட 20க்கும் மேற்பட்ட சிறுமிகளைக் காணவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. மீட்புக் குழுவினர் படகுகள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மூலம் அவர்களைத் தேடும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். காணாமல் போன தங்களின் உறவினர்கள் குறித்த தகவல்களை எதிர்பார்த்து, நூற்றுக்கணக்கானோர் சமூக வலைதளங்களில் கண்ணீருடன் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த பெரும் சோகம் டெக்சாஸ் மாகாணம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
The post டெக்சாஸை உலுக்கிய கோர வெள்ளம்; பேய் மழையில் சிக்கி 24 பேர் பலி: 20 சிறுமிகள் மாயம் appeared first on Dinakaran.