
சென்னை,
'அயோத்தி, கருடன், நந்தன்' உள்ளிட்ட வெற்றிப்படங்களை அடுத்து சசிகுமார் தற்போது நடித்துள்ள படம் 'டூரிஸ்ட் பேமலி'. குட் நைட், லவ்வர் படங்களை தயாரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரித்துள்ளது. அபிஷன் ஜீவிந்த் இயக்கும் இந்தப் படத்தில் சிம்ரன் கதாநாயகியாக நடித்துள்ளார். யோகி பாபு, எம்.எஸ்.பாஸ்கர், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் வருகிற மே 1-ந் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் டீசர் மற்றும் டிரெய்லர் வெளியானது. அதில் இலங்கைத் தமிழர்களாக நடித்துள்ள சசிகுமார் சிம்ரனின் இலங்கை தமிழ் பேச்சு ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இதனால் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இந்தநிலையில் லைகா புரொடக்சன்ஸ் நிறுவனர் ஜிகேஎம் தமிழ் குமரன் டூரிஸ்ட் பேமிலி படத்திற்கு முதல் விமர்சனத்தை கொடுத்துள்ளார். இது குறித்த அவர் கூறுகையில், "டூரிஸ்ட் பேமிலி படத்தை பார்த்தேன். இந்த படம் என்னை மிகவும் ஈர்த்துள்ளது. மனதையும் உருக்கியுள்ளது. இப்படத்தில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் அருமையாக நடித்திருக்கின்றனர். இயக்குனர் அபிஷன் யாரிடமும் உதவி இயக்குனராக பணியாற்றாமல் தனது முதல் படத்திலேயே அற்புதமான கதை மற்றும் நகைச்சுவையை வழங்கியுள்ளார். இத்திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைய என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள். இப்படம் கண்டிப்பாக குடும்பத்துடன் கொண்டாட வேண்டிய படம்" என்று பாராட்டியுள்ளார்.
