
விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு நடு அக்ரஹாரம் பகுதியில் சேது நாராயணப் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இவ்வூரின் நீர் நிலைகளில் தண்ணீர் எப்போதும் வற்றாமல் இருப்பதால், 'வற்றா இருப்பு' என்ற பெயர் ஏற்பட்டு அதுவே காலப்போக்கில் 'வத்திராயிருப்பு' என்று மருவிவிட்டது. வத்திராயிருப்பில் வாழ்ந்து வந்த அழகர் ஐயங்கார் என்பவரால், இந்தக் கோவில் நிர்மாணிக்கப்பட்டது என்றும், ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்றும் கூறப்படுகிறது.
இக்கோவிலில் சேதுநாராயணப் பெருமாள், ஸ்ரீதேவி - பூதேவி சன்னிதிகளும், சக்கரத்தாழ்வார், ஆஞ்சநேயர், கருடாழ்வார் ஆகியோரின் உபசன்னிதிகளும் உள்ளன. கோவிலுக்கு தேரும் இருக்கிறது. இந்த ஆலயத்தில் பாஞ்சராத்திர முறைப்படி ஒரு கால பூஜை மட்டுமே நடக்கின்றது. இங்கு ஆவணி மாதம் நடைபெறும் திருவிழா முக்கியத்துவம் பெற்றதாக உள்ளது.
புராணக்கதை
மகாபாரத காலத்தில் பஞ்சபாண்டவர்களில் ஒருவரான அர்ச்சுனன், தீர்த்த யாத்திரை மேற்கொண்டான். அவன் இப்பகுதிக்கு வந்தபோது, இங்குள்ள மக்கள் தண்ணீர் இன்றி தவிப்பதை கண்டான். அவர்களின் தண்ணீர் தேவையை பூர்த்தி செய்ய எண்ணிய அர்ச்சுனன், தன்னுடைய வில்லை எடுத்து ஓரிடத்தில் அம்பு எய்தான். அந்த அம்பு பூமியை பிளந்து இறங்கியது. அந்த இடத்தில் இருந்து பேரூற்று கிளம்பியது. அந்த பேரூற்று, ஆறாக பெருக்கெடுத்து ஓடியது. இந்த ஆறு, 'அர்ச்சுனன் ஆறு' என்று மக்களால் அழைக்கப்பட்டது.
ஒரு சமயம் செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமி, 'பூமியில் தவம் செய்ய சிறந்த இடம் எது?' என்று ரிஷிகளிடம் கேட்டார். அதற்கு அவர்கள், இப்பகுதியை காட்டினர். உடனே இங்கு வந்த மகாலட்சுமிக்கு, இவ்விடத்தைப் பார்த்ததும் முகம் மலர்ந்தது. இதனை ஸ்ரீதேவித் தாயார் முகம் மலர்ந்து ஏற்றதால், இந்த ஊருக்கு ஸ்ரீவக்த்ரபுரம் (ஸ்ரீ - மகாலட்சுமி; வக்த்ரம்-திருமுகம் மலர்தல்) என்ற பெயர் வந்தது.
மகாலட்சுமி தவம் செய்த இடம்
மகாலட்சுமி இந்த ஊரில் தவம் செய்து, பின்னர் அருகில் உள்ள திருத்தங்கல் என்னும் ஊரில் மகாவிஷ்ணுவை திருமணம் செய்து கொண்டதாக புராணக்கதை கூறப்படுகிறது. மகாலட்சுமி தவம் செய்த தலம் என்பதால், இங்கு வந்து வழிபடுவோருக்கு செல்வச் செழிப்பு உண்டாகும், திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவாக திருமணம் கைகூடும் என்பது ஐதீகம்.
தமிழர்கள், முல்லை நிலத் தெய்வமாக மாயோனை வணங்கியதாக சங்க இலக்கியம் கூறுகிறது. மாயோன் என்ற சொல்லுக்கு 'கருமை நிறம் கொண்டவன்' என்று பொருள். எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடல் என்னும் நூலில், திருமால் குறித்து 8 பாடல்கள் உள்ளன. பன்னிரு ஆழ்வார்கள் திருமால் குறித்து பாடிய பாடல்களின் தொகுப்பு 'நாலாயிர திவ்வியப் பிரபந்தம்' என்று அழைக்கப்படுகிறது. காடும் காடு சார்ந்த இடமும் 'முல்லை' என்று அழைக்கப்படுகிறது. முல்லை நிலத்தின் செழிப்பிற்கு, தண்ணீர் இன்றியமையாதது. அதன் தேவையை அர்ச்சுனன், தனது வில்லால் பூர்த்தி செய்தான் என்று இக்கோவில் புராணம் கூறுகிறது.
சித்ரா பவுர்ணமி விழா
வத்திராயிருப்பில் சித்ரா பவுர்ணமியை முன்னிட்டு மூலவர் மற்றும் உற்சவர் சேதுநாராயணப் பெருமாள் சுவாமிக்கு, 18 வகையான அபிஷேக பொருட்களை கொண்டு திருமஞ்சனம் நடைபெறும். பின்னர் இறைவனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, பூஜைகள் நடைபெறும். தொடர்ந்து சுவாமி வீதி உலா வருவார். அதன்பிறகு சேதுநாராயணப் பெருமாள், கள்ளழகர் வேடமிட்டு ஆற்றில் இறங்குவார்.
இந்த ஆலயத்தில் ஆண்டு தோறும் வைகுண்ட ஏகாதசி அன்று, சொர்க்கவாசல் திறக்கப்படும். முன்னதாக அதிகாலை 3 மணிக்கு மூலவர் மற்றும் உற்சவ ஆழ்வார்களுக்கு திருமஞ்சனம், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து நாலாயிர திவ்ய பிரபந்தமும், ஆண்டாள் திருப்பாவையும் ஓதப்படும். பின்னர் பரம்பத வாசல் வழியாக சேது நாராயணப் பெருமாள் வெளியேறி பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளிப்பார்.