
கன்னியாகுமரி மாவட்ட எஸ்.பி. ஸ்டாலின் நீதிமன்றத்தில் குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கி தருவதில் முன்னுரிமை அளித்து செயல்பட்டு வருகிறார். அவர் நீதிமன்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து கண்காணித்து அவ்வப்போது புலன் விசாரணை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்களை வழங்கி வருகிறார். கடந்த 2021-ம் ஆண்டு கன்னியாகுமரி மாவட்டம், ஆரல்வாய்மொழி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட தோவாளை பகுதியைச் சேர்ந்த சையதுஆசான் மகன் பீர்முகமது (வயது 33) தாக்கப்பட்டார். அவரை கொலை செய்யும் நோக்கத்தில் கடுமையாக தாக்கியது தொடர்பாக தோவாளை அருகே உள்ள கிருஷ்ணன்புதூர் பகுதியை சேர்ந்த கிருஷ்ணன் மகன் கார்த்திகைகண்ணன், அதே பகுதியை சேர்ந்த சுவாமிநாதன் மகன் வெங்கட் ஆகிய 2 பேர் மீது ஆரல்வாய்மொழி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை நாகர்கோவில் முதன்மை சார்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்நிலையில் நேற்று நீதிபதி குற்றவாளிகள் 2 பேருக்கும் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கினார். நீதிமன்ற வழக்கு விசாரணை, சாட்சிகள் விசாரணை ஆகியவற்றில் சிறப்பாக செயல்பட்டு குற்றவாளிகளுக்கு தண்டனை வாங்கித் தர காரணமாக இருந்த இவ்வழக்கின் புலன் விசாரணை அதிகாரிகள், அரசு குற்ற வழக்கறிஞர், நீதிமன்ற காவலர், இந்த வழக்கின் நீதிமன்ற விசாரணையை முறையாக கண்காணித்த நாகர்கோவில் உட்கோட்ட ஏ.எஸ்.பி. ஆகியோரை மாவட்ட எஸ்.பி. பாராட்டினார்.