
சென்னை,
'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த பிரதீப் ரங்கநாதன் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் படத்தில் நடித்துள்ளார். திரையரங்குகளில் வெளியான இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'டிராகன்' படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
வெளியான முதல் மூன்று நாட்களில் உலக அளவில் ரூ. 50 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும் படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
இயக்குநர்கள், நடிகர்கள் எனப் பலரும் இப்படத்திற்குப் பாராட்டுகளைத் தெரிவித்து வருகிறார்கள். அந்த வரிசையில் இயக்குநர் ஷங்கர் இப்படத்தைப் பார்த்துவிட்டுப் படக்குழுவைப் பாராட்டி தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் "டிராகன் மிக அழகான திரைப்படம். இப்படத்தை அற்புதமாக எழுதிய இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துக்கு வாழ்த்துகள். படத்தில் அத்தனை கதாபாத்திரங்களுக்கும் அழகான மற்றும் முழுமையான பயணம் இருக்கிறது. தான் ஒரு அதிரடியான என்டர்டெயினர் என்பதையும் வலிமையானவர் என்பதையும் மீண்டுமொரு முறை நிரூபித்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன்.
இயக்குநர் மிஷ்கின், அனுபமா பரமேஸ்வரன், ஜார்ஜ் மரியம் ஆகியோர் மனதில் நிலைத்திருக்கும்படியான நடிப்பைக் கொடுத்திருக்கிறார்கள். அனைத்து கதாபாத்திரங்களும் நன்றாக நடித்திருக்கிறார்கள். படத்தின் கடைசி 20 நிமிடங்கள் என்னைக் கண்கலங்கச் செய்தது. இந்த உலகத்தில் ஏமாற்று வேலைகள் அதிகரித்துக் கொண்டிருக்கும் வேளையில் இப்படம் சொல்லும் மெசேஜ் மிகவும் முக்கியமானது" என பதிவிட்டிருக்கிறார்.
இயக்குநர் ஷங்கரின் பதிவுக்கு பதில் எழுதிய பிரதீப் ரங்கநாதன் தனது எக்ஸ் தளத்தில், "சார் உங்களின் திரைப்படத்தைப் பார்த்து வளர்ந்த, உங்களைப் பார்த்து வியந்த, உங்களை முன்னுதாரணமாகக் கொண்ட ஒரு பையனுக்கு இப்படியான பாராட்டுகள் குறித்து கனவிலும் நினைத்ததில்லை. நீங்கள் என்னைப் பற்றிப் பேசுவது நம்ப முடியாத கனவு. என் உணர்வுகளை வார்த்தைகளால் வெளிப்படுத்த முடியவில்லை" என பதிவிட்டிருக்கிறார்.