
புதுடெல்லி,
டெல்லி சட்டசபைக்கான தேர்தலில், 48 இடங்களை கைப்பற்றி 27 ஆண்டுகளுக்கு பின்னர் பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தது. அக்கட்சியை சேர்ந்த ரேகா குப்தா முதல்-மந்திரியாக பொறுப்பேற்று கொண்டார். இதேபோன்று, ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரியான அதிஷி டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரானார்.
இந்நிலையில், டெல்லி சட்டசபையின் சபாநாயகராக பா.ஜ.க.வை சேர்ந்த எம்.எல்.ஏ. விஜேந்தர் குப்தா இன்று தேர்ந்தெடுக்கப்பட்டார். இதனை தொடர்ந்து சட்டசபை கூட்டம் தொடங்கி நடந்தது. ஆனால், முதல் நாளிலேயே ஆளும் பா.ஜ.க.வுக்கும், எதிர்க்கட்சியான ஆம் ஆத்மிக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. இரு கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களும் அவையில் அமளியில் ஈடுபட்டனர்.
ஆம் ஆத்மியை சேர்ந்த முன்னாள் முதல்-மந்திரி மற்றும் டெல்லி சட்டசபையின் எதிர்க்கட்சி தலைவரான அதிஷி கூறும்போது, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் மற்றும் பகத் சிங் ஆகியோரின் புகைப்படங்கள் முதல்-மந்திரி அலுவலகத்தில் இருந்து நீக்கப்பட்டு உள்ளன என குற்றச்சாட்டாக கூறினார். தொடர்ந்து அக்கட்சி உறுப்பினர்கள் அவையில் எழுந்து நின்று கோஷங்களை எழுப்பினர்.
எனினும் எந்த புகைப்படமும் நீக்கப்படவில்லை என பா.ஜ.க. எம்.எல்.ஏ. தர்வீந்தர் சிங் மார்வா கூறினார். கெஜ்ரிவால் ஒருவரே பொய் கூறுகிறார் என நாங்கள் நினைத்தோம். ஆனால், அதிஷி அவரை மிஞ்சி விட்டார் என்று பதிலுக்கு குற்றச்சாட்டாக கூறினார்.
இந்த நிலையில், டெல்லி முதல்-மந்திரி அறையில் அம்பேத்கர், பகத்சிங் படங்கள் உள்ளன என அதிஷி குற்றச்சாட்டுக்கு பதிலடி அளிக்கும் வகையில், பா.ஜ.க. புகைப்படம் ஒன்றை வெளியிட்டு உள்ளது.
அதனுடன், டெல்லி மந்திரி சபையில் இடம் பெற்றுள்ள அனைத்து மந்திரிகளின் அறைகளில் மகாத்மா காந்தி, பகத்சிங், பாபா சாகேப் பி.ஆர். அம்பேத்கர், ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடியின் புகைப்படங்கள் சுவரில் மாட்டப்பட்டு உள்ளன என அதற்கான விளக்கம் ஒன்றையும் டெல்லி பா.ஜ.க. தெரிவித்து உள்ளது.