
கோவை,
மேட்டுப்பாலயம் அடுத்த வனப்பகுதிக்கு அருகே 10 க்கும் மேற்பட்ட மலை கிராமம் உள்ளன. அங்கு கடம்பான் கோம்பை என்ற கிராமத்தை சேர்ந்த மணி என்பவர் 2 தினத்திற்கு முன்பு இறந்தார். அவர் உடல் பிரேத பரிசோதனை முடித்து நீராடி என்கிற கிராமத்தில் இருந்து கடம்பான் கோம்பை என்கிற கிராமத்திற்கு உடலை கொண்டு செல்ல வேண்டும். ஆனால் மலை கிராமம் என்பதால் சாலை வசதி இல்லாததால் அங்கிருக்கக்கூடிய பழங்குடி மக்கள் மணி என்பவரின் உடலை கம்பத்தில் கட்டி தோல் மீது வைத்து சுமார் 5 கி.மீ வரை தூக்கிச்சென்றனர்,
அந்த காட்சியை அப்பகுதியை சேர்ந்தவர் செல்போனில் பதிவு செய்து இணையத்தில் வெளியிட்டார். வீடியோ வெளியான பின்னர் தான் இந்த கிராமத்தில் சாலை பிரச்சினை இருக்கிறது என தெரியவந்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட நிர்வாகம் வீடியோ வெளியானதை அடுத்து வருவாய் துறை மற்றும் வனத்துறையினரை ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சாலை பணிகள் மற்றும் சாலைகள் அமைப்பது குறிட்து ஆய்வு நடத்தினர். ஒரு கோடி ரூபாய் திட்ட மதிப்பில் சாலை பணி தொடங்க இருப்பதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
10 மலை கிராமங்களில் இந்த சாலை பிரச்சினைகள் உள்ளன. இந்த சம்பவம் குறித்து மத்திய இணை மந்திரி எல்.முருகன் வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்திருப்பதாவது:-
கோவையில் இறந்தவரின் உடல் 5 கி.மீ. தூக்கி செல்லப்பட்ட சம்பவம் மிகவும் வருத்தமளிக்கிறது. அடிப்படை சாலை வசதி இன்றி தவித்து வரும் மலை கிராம மக்களின் சிரமங்கள் குறித்து தமிழக அரசுக்கு கவலை இல்லை. கோவை - கடமான்கோம்பை பகுதிவாழ் மக்களுக்கு உடனடியாக சாலை வசதி ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என அவர் கோரிக்கையாக கேட்டு கொண்டார்.