
சென்னை,
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் விஜே சித்து, ஹர்ஷத், சினேகா மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின் , கவுதம் வாசுதேவ் மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்துள்ள 'டிராகன்' படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்துள்ளார். கதாநாயகிகளாக அனுபமா பரமேஸ்வரன், கயடு லொகர் ஆகிய இருவரும் நடித்துள்ளனர்.
'டிராகன்' படம் முதல் நாளில் உலக அளவில் சுமார் ரூ.6 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. தனுஷ் இயக்கத்தில், தனுஷின் சகோதரி மகன் நடித்துள்ள "நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்" படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், மேத்யூ தாமஸ், வெங்கடேஷ் மேனன், ரபியா கதூன், ரம்யா ரங்கநாதன், சித்தார்த் ஷங்கர் மற்றும் பலர் நடித்துள்ளனர். இளைஞர்களின் காதல், உறவுமுறை, திருமணம் பற்றிய கதைக்களம் கொண்டு இப்படம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். இப்படம் உலகம் முழுவதும் நேற்று முதல் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது.
இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தனுஷின் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' மற்றும் 'டிராகன்' படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்து பதிவிட்டுள்ளார். அந்தப் பதிவில், "'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' மற்றும் 'டிராகன்' படங்களுக்கு சிறந்த வரவேற்பு கிடைத்துள்ளது. இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து, பிரதீப் ரங்கநாதன், ஏஜிஎஸ் மற்றும் 'டிராகன்' படக்குழுவினர் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். இயக்குநர் தனுஷ் , ஜிவி பிரகாஷ் மற்றும் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' குழுவினருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் " என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படமான 'கூலி' படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.