வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டிரம்ப்புடன் ஏற்பட்ட மோதல் எதிரொலியாக புதிய அரசியல் கட்சியை தொடங்கிய எலான் மஸ்க், தேர்தலில் போட்டியிடவும் முடிவு செய்துள்ளார். உலகின் பெரும் கோடீஸ்வரரான எலான் மஸ்கிற்கும், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப்பிற்கும் இடையே இருந்த நட்பு, சமீப காலமாக கடும் மோதலாக மாறியுள்ளது. அமெரிக்காவின் கடனை 3.4 டிரில்லியன் டாலர்கள் அதிகரிக்கும் என நிபுணர்களால் கணிக்கப்பட்ட, டிரம்பின் புதிய செலவின மசோதாவை எலான் மஸ்க் கடுமையாக எதிர்த்தார்.
அரசாங்க செலவினங்களைக் குறைக்கும் குழுவிற்குத் தலைமை வகித்த எலான் மஸ்க், இந்த மசோதாவை ஆதரித்த எம்.பி.க்களை, ‘அவர்களைத் தோற்கடிப்பதுதான் பூமியில் நான் செய்யும் கடைசி வேலையாக இருக்கும்’ என்று கூறி சபதமிட்டார். இதற்குப் பதிலடியாக, எலான் மஸ்க்கின் நிறுவனங்களுக்கான மானியங்களை ரத்து செய்து, அவரை நாடு கடத்தப்போவதாகவும் அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்தார். இந்த மோதல்களின் பின்னணியில், அமெரிக்காவின் இரு கட்சி (குடியரசு மற்றும் ஜனநாயக கட்சி) அமைப்பிற்கு மாற்றாக ‘புதிய கட்சி வேண்டுமா?’ என எலான் மஸ்க் தனது ‘எக்ஸ்’ தளத்தில் கருத்துக் கணிப்பு நடத்தினார். அதில், பெருவாரியான மக்கள் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, தற்போது எலான் மஸ்க் வெளியிட்ட அறிவிப்பில், ‘அமெரிக்கா கட்சி என்ற புதிய அரசியல் கட்சியைத் தொடங்குகிறேன். அமெரிக்க மக்களின் சுதந்திரத்தை மக்களுக்கே திருப்பிக் கொடுக்கவே, இன்று ‘அமெரிக்கா கட்சி’ என்ற கட்சி உருவாக்கப்பட்டுள்ளது’ என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மேலும், 2026 இடைக்காலத் தேர்தலிலோ அல்லது 2028 அதிபர் தேர்தலிலோ போட்டியிடுவீர்களா என்று நெட்டிசன் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த எலான் மஸ்க், ‘அடுத்த ஆண்டு’ என்று பதிலளித்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். மேலும் அவர் வெளியிட்ட பதிவில், ‘ஒரு சில செனட் மற்றும் நாடாளுமன்ற இடங்களில் மட்டும் முழுமையாகக் கவனம் செலுத்தி, வெற்றி தோல்வியைத் தீர்மானிக்கும் சக்தியாக மாறுவதே தனது கட்சியின் வியூகம்’ என்று அவர் கூறியுள்ளார். அமெரிக்க அரசியல் வரலாற்றில் ‘அமெரிக்கா கட்சி’ என்ற கட்சியை புதியதாக தொடங்கி, எதிர்காலத்தில் தேர்தல் அரசியலை எலான் மஸ்க் தேர்வு செய்துள்ளது பெரும் அரசியல் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
The post டிரம்ப்புடன் மோதல் எதிரொலி; புதிய அரசியல் கட்சியை தொடங்கிய எலான் மஸ்க்: தேர்தலில் போட்டியிடவும் முடிவு appeared first on Dinakaran.