
வாஷிங்டன்.
அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவி ஏற்ற பிறகு உலகநாடுகளுக்கான வரி விதிப்பு, சட்டவிரோத வெளிநாட்டவர்களை நாடு கடத்துதல் உள்ளிட்ட பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். இதன் மூலம் உலக நாடுகளின் கவனத்தை அவர் தன் பக்கம் இழுத்து உள்ளார். இந்த நிலையில் டிரம்பின் சொந்த நாட்டிலே அவருக்கு எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது. நிதி உதவியை முடக்கியது தொடர்பாக அவரது நிர்வாகத்துக்கு எதிராக ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்து உள்ளது. அமெரிக்காவின் மாசசூசெட்ஸ் மாகாணத்தில் பிரபலமான ஹார்வர்டு பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
இந்த பல்கலைகழகத்தின் பேராசிரியர்களுக்கான அதிகாரத்தை குறைக்கவும், பல்கலைக்கழகத்தில் உள்ள சமத்துவம் மற்றும் பன்முக திட்டங்களை நிறுத்தும்படியும் டிரம்ப் நிர்வாகம் புதிய வழிகாட்டு முறைகளை வெளியிட்டு உள்ளது. ஆனால் இதை ஏற்க பல்கலைக்கழகம் மறுத்து விட்டது. இதையடுத்து ஹார்வர்டு பல்கலைக்கழகத்துக்கு வழங்கப்பட்டு வந்த ரூ.18,500 கோடி (2.2 பில்லியன் டாலர்) நிதி உதவியை டிரம்ப் அதிரடியாக நிறுத்தி உத்தரவிட்டார். மேலும் வரி விதிப்போம் என்றும் அவர் எச்சரிக்கை விடுத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
நிதி உதவியை முடக்கியதையடுத்து டிரம்ப் நிர்வாகத்துக்கு எதிராக மாசசூசெட்ஸ் கூட்டாட்சி நீதிமன்றத்தில் ஹார்வர்டு பல்கலைக்கழகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இது தொடர்பாக அப்பல்கலைக்கழக தலைவர் ஆலன் கார்பர் எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
நிதி முடக்கப்பட்டதை எதிர்த்து ஒரு வழக்கை தாக்கல் செய்து இருக்கிறோம். அரசு தனது அதிகாரத்தை பயன்படுத்தி ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் கல்வி சார்ந்த முடிவுகளை கட்டுப்படுத்த பார்க்கிறது. இது அமெரிக்க அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது ஆகும். அரசின் அதிகாரத்துக்கு அப்பாற்பட்டது. இது கூட்டாட்சி சட்டங்கள் மற்றும் விதிமுறைகளை மீறுவதாக உள்ளது. எந்த கட்சி ஆட்சியில் இருந்தாலும் தனியார் பல்கலைக்கழகங்கள் என்ன கற்பிக்கலாம், யாரை அனு மதிக்கலாம் மற்றும் பணி அமர்த்தலாம் என்பதை எந்த அரசும் ஆணையிட கூடாது. இவ்வாறு அவர் கூறி இருக்கிறார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.