ஏராளமான அரசுத் துறை தலைமை அலுவலகங்கள் இயங்கி வரும் டிபிஐ வளாகத்தில் பொதுக் கழிப்பறை வசதி இல்லாதது, அங்கு வரும் பொதுமக்களுக்கு பெரும் சங்கடமாக இருந்து வருகிறது. சென்னை நுங்கம்பாக்கம் கல்லூரிச் சாலையில் அமைந்துள்ளது டிபிஐ வளாகம். தற்போது அதன் பெயர் பேராசிரியர் அன்பழகன் வளாகம் என மாற்றப்பட்டுள்ளது. இங்கு அரசுத்துறைகளின் தலைமை அலுவலகங்கள் பல இயங்கி வருகின்றன.
பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம், தொடக்கக் கல்வி இயக்குநர் அலுவலகம், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குநர் அலுவலகம், ஆசிரியர் தேர்வு வாரியம், தனியார் பள்ளிகள் இயக்குநர் அலுவலகம், அரசு தேர்வுத்துறை இயக்குநர் அலுவலகம், பள்ளிசாரா கல்வி மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்குநர் அலுவலகம், ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி (எஸ்எஸ்ஏ) மாநில திட்ட இயக்குநர் அலுவலகம், தமிழ்நாடு பாடநூல் மற்றம் கல்வியியல் பணிகள் கழகம், மாநில பெற்றோர் ஆசிரியர் கழகம் என பள்ளிக் கல்வித்துறை தொடர்பான அனைத்து தலைமை அலுவலகங்களும் இந்த வளாகத்தில்தான் உள்ளன.