கிருஷ்ணகிரியில் 1922 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு: ஓட்டி பார்த்து ஆய்வு செய்த கலெக்டர்

4 hours ago 2

கிருஷ்ணகிரி, மே 11: கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து துறை சார்பில், தனியார் பள்ளி வாகனங்களின் பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் பராமரிப்பு பணிகளை மாவட்ட கலெக்டர் தினேஷ்குமார் நேற்று ஆய்வு செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: வட்டார போக்குவரத்து அலுவலகம், கிருஷ்ணகிரி எல்லைக்கு உட்பட்ட 48 பள்ளிகள், ஓசூரில் 105 பள்ளிகள் உள்ளன. இதில், கிருஷ்ணகிரி வட்டாரத்திற்கு உட்பட்ட 1029 வாகனங்கள், ஓசூரில் 893 வாகனங்கள் என மொத்தம் 1922 பேருந்துகள் முதற்கட்டமாக பள்ளி வாகன சிறப்பு விதிகள் 2012ன்படி, 22 அம்சங்களுடன் இயக்கப்படுகிறதா என்பது குறித்து ஆய்வு கமிட்டிகளுடன் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆய்வு பணிகள் ஒருவார காலத்திற்கு நடைபெறுகிறது. இந்த ஆய்வில், பள்ளி வாகனங்களில் அவசர காலங்கள் அல்லது அசாதாரண சூழ்நிலைகளில் மாணவர்கள் உடனடியாக தொடர்புகொள்ள அவசரகால பொத்தான் பள்ளி வாகனங்களில் பொருத்தப்பட வேண்டும். வாகனங்களில் இருபுறமும் பள்ளியின் பெயர்கள், முகவரிகள் மற்றும் தொலைபேசி எண்கள், கைபேசி எண்கள் கட்டாயம் எழுத்தப்பட்டு இருக்க வேண்டும். மேலும், வாகன ஓட்டுநர்கள் தங்களுடைய வாகனத்தை நல்ல முறையில் பராமரிக்க வேண்டும். வாகனங்களில் சிறு பழுது ஏற்பட்டாலும் அதனை உடனடியாக பழுது நீக்கம் செய்ய வேண்டும்.

டீசல் பில்டர்கள், பிரேக் லைன்கள் பழுது ஏற்பட்டால் உடனடியாக பள்ளி நிர்வாகத்திற்கு தகவல் தெரிவித்து சீர்செய்ய வேண்டும். பள்ளி நிர்வாகம் பழுதுகளை நீக்கவில்லை என்றால் வட்டார போக்குவரத்து அலுவகத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். பழுது சீர்செய்யவில்லை என்றால் வாகனம் விபத்துக்குள்ளாக நேரிடும். வாகன ஓட்டுநர்கள் வாகனத்தை ஒரு கோயிலாக பராமரிக்க வேண்டும். நகர்புறம் அல்லது நெடுஞ்சாலைகளில் வாகனத்தை இயக்கும் போது வேகமாக செல்ல கூடாது.

பெற்றோர்கள் உங்களை நம்பி தான் வாகனங்களில் குழந்தைகள் செல்ல அனுமதிக்கிறார்கள். எனவே மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி வாகனத்தை வேகமாக இயக்க கூடாது. மேலும் வாகன ஓட்டுநர்கள் போதை பொருட்களை பயன்படுத்தி வானத்தை இயக்கினால் சட்டபூர்வ நடவடிக்கை மேற்கொண்டு வாழ்நாள் முழுவதும் ஓட்டுநர் பணி செய்யாதபடி நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வாகன ஓட்டுநர்கள் மாணவ மாணவியர்களை வீட்டிலிருந்து பள்ளிக்கும், பள்ளியிலிருந்து வீட்டிற்கும் பாதுகாப்பாக அழைத்து செல்வது உங்கள் தலையாய கடமையாகும். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர், கல்லூரி வளாகத்தில் நிறுத்தப்பட்டிருந்த, ஒரு பள்ளி வாகனத்தை வளாகத்திலிருந்து குப்பம் சாலை சந்திப்பு வரை வாகனத்தை ஓட்டி பார்த்து வட்டார போக்குவரத்து அலுவலர் மற்றும் ஓட்டுநரிடம் சில குறைபாடுகளை சரி செய்ய அறிவுரை வழங்கினார்.ஆய்வின் போது கிருஷ்ணகிரி வருவாய் கோட்டாட்சியர் ஷாஜகான், கிருஷ்ணகிரி வட்டார போக்குவரத்து அலுவலர் பிரபாகர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் அன்புசெழியன், மணிமாறன், மாவட்ட கல்வி அலுவலர் ரமாவதி, மெட்ரிக் கல்வி அலுவலர் கோபாலப்பா, தாசில்தார் சின்னசாமி, தீயணைப்பு நிலைய அலுவலர் அந்தோணிசாமி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

The post கிருஷ்ணகிரியில் 1922 தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு: ஓட்டி பார்த்து ஆய்வு செய்த கலெக்டர் appeared first on Dinakaran.

Read Entire Article