சென்னை: "மத்திய அரசு வழங்கும் நிதியைக் கொண்டு டிஜிட்டல் பயிர் சர்வே பணியை வேறு அமைப்புகள் மூலம் தமிழக அரசு செய்ய வேண்டும். இந்தப் பணிகளில் இருந்து மாணவர்களை அரசு விடுவிக்க வேண்டும்" என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “தமிழ்நாடு முழுவதும் வேளாண் நிலம், பயிர் குறித்த அனைத்து விவரங்களையும் டிஜிட்டல்மயமாக்கும் நோக்குடன் மேற்கொள்ளப்பட்டு வரும் டிஜிட்டல் பயிர் சர்வே பணிகளில் வருவாய்த்துறை அதிகாரிகளை ஈடுபடுத்துவதற்கு பதிலாக வேளாண் கல்லூரி மாணவ, மாணவியர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தமிழ்நாடு அரசின் இயலாமையை மறைப்பதற்காக மாணவ, மாணவியரின் பாதுகாப்பை பலி கொடுப்பது கண்டிக்கத்தக்கது.