டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பேரில் ரூ38 லட்சம் மோசடி; வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பக்கூடிய ஏஜென்ட்டாக செயல்பட்ட 2 பேர் சிக்கினர்: ரூ46.22 லட்சம் பறிமுதல்; குற்றப்பிரிவு போலீசார் அதிரடி

2 weeks ago 1

ஆவடி: ஆவடி அருகே டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பேரில் ஓய்வு பெற்ற பெண் விரிவுரையாளரிடம் ரூ38 லட்சம் மோசடி செய்த வழக்கில் வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பும் ஏஜென்ட்டாக செயல்பட்ட 2 பேரை குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ46.22 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ஆவடி காவல் ஆணையரக எல்லைக்குட்பட்ட திருவேற்காடு, வேலப்பன்சாவடி பகுதியைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கல்லூரி விரிவுரையாளர் மேரி ஜெனட் டெய்சி (62). இவரது செல்போன் எண்ணுக்கு கடந்த ஆண்டு ஜூலை 18ம் தேதி மும்பை சைபர் கிரைமிலிருந்து பேசுவதாக தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், உங்கள் பெயரில் சிம் கார்டு வாங்கப்பட்டு, அதன் மூலம் சமூக விரோத செயல்கள் நடைபெற்றுள்ளதாகவும், வங்கிக் கணக்கு விவரங்களை தெரிவிக்குமாறும் கேட்டுள்ளனர்.

மேலும், ஆர்.பி.ஐ அதிகாரிகள் சோதனை செய்து, உங்கள் வங்கிக் கணக்கில் உள்ள பணம் முறையானதுதானா, அல்லது மோசடி பணமா என்பதை கண்டுபிடிப்பார்கள். முறையான பணம் இல்லையெனில் டிஜிட்டல் அரெஸ்ட் செய்து விடுவோம் எனவும் மிரட்டியுள்ளனர். இதனால் அச்சமுற்ற டெய்சி, மர்ம நபர்கள் தெரிவித்த வங்கிக் கணக்குகளுக்கு ரூ38.16 லட்சத்தை அனுப்பியுள்ளார். பின்னர் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்து, அவர் தன்னை ஏமாற்றிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு ஆவடி காவல் ஆணையரிடம் புகார் கொடுத்தார். பின்னர், இதுகுறித்து நடவடிக்கை எடுக்குமாறு ஆவடி காவல் ஆணையர் சங்கர் உத்தரவிட்டார். அதன்பேரில் மத்திய குற்றப்பிரிவு துணை ஆணையர் பெருமாள் வழிகாட்டுதலின்படியும், இணையவழி குற்றப்பிரிவு கூடுதல் துணை ஆணையர் அறிவுறுத்தலின்படியும், இணையவழி குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் பிரவீன் குமார் தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில் அண்ணாநகர் பகுதியில் பதுங்கி இருந்த பிஜாய் (33) என்பவரை கடந்த மாசம் கைது செய்தனர். மேலும் இதில் தொடர்புடைய குற்றவாளிகளை தேடிவந்தனர்.

இதில் பிஜாய் கொடுத்த தகவலின் பேரில் மண்ணடியைச் சேர்ந்த முகமது இலியாஸ் (36) மற்றும் பர்மா பஜாரில் கடை நடத்தி வந்த அறந்தாங்கியைச் சேர்ந்த சாதிக் பாட்சா வயது (39) ஆகிய இருவரையும் நேற்று போலீசார் கைது செய்தனர். இதில் எம்பிஏ பட்டதாரியான இலியாஸ், லாஜிஸ்டிக் நிறுவனத்தில் வேலை பார்த்துக்கொண்டே கமிசனுக்கு ஆசைப்பட்டு, பகுதி நேர வேலை என்ற பேரில் பொதுமக்களை ஏமாற்றி வசூலித்த பணத்தை காசோலை மூலம் வெளிநாடுகளுக்கு அனுப்பும் ஏஜென்ட்டாக செயல்பட்டு வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. கைதான இவர்களிடமிருந்து ஒரு டேப், 3 செல்போன் மற்றும் பல்வேறு நபர்களிடம் இதுபோன்று மோசடி செயல்களில் ஈடுபட்டு வைத்திருந்த ரூ46.22 லட்சம் ரொக்கப்பணத்தை போலீசார் அதிரடியாக பறிமுதல் செய்தனர். இருவரையும் பூந்தமல்லி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

The post டிஜிட்டல் அரெஸ்ட் என்ற பேரில் ரூ38 லட்சம் மோசடி; வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பக்கூடிய ஏஜென்ட்டாக செயல்பட்ட 2 பேர் சிக்கினர்: ரூ46.22 லட்சம் பறிமுதல்; குற்றப்பிரிவு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.

Read Entire Article