திருச்சி: டிஐஜி தொடர்ந்த அவதூறு வழக்கில், திருச்சி நீதிமன்றத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று ஆஜரானார். திருச்சி ஜூடீசியல் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் (எண்.4) திருச்சி சரக டிஐஜி வருண்குமார் தொடர்ந்த அவதூறு வழக்கில் சீமான் ஆஜராகாமல் இருந்தார். நேற்று முன்தினம் நடைபெற்றவழக்கு விசாரணையின்போதும் சீமான் ஆஜராகாததால், ஏப்.8-ம் தேதி நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று நீதிபதி விஜயா உத்தரவிட்டார்.
அதன்படி, திருச்சி ஜே.எம். 4 நீதிமன்றத்தில் நேற்று சீமான் ஆஜரானார். அப்போது, நீதிபதி உத்தரவின்பேரில், டிஐஜி வருண்குமார் தரப்பில் தாக்கல் செய்த வழக்கு குறித்த ஆவண நகல்கள் சீமான் தரப்புக்கு வழங்கப்பட்டன. தொடர்ந்து, ஏப். 29-ம் தேதிக்கு விசாரணையை தள்ளிவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.