
மும்பை,
ஐ.பி.எல். தொடரில் மும்பையில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை 20 ஓவரில் 8 விக்கெட்டை இழந்து 155 ரன்கள் எடுத்தது. தொடர்ந்து 156 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் குஜராத் களம் கண்டது.
குஜராத் பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது திடீரென மழை குறுக்கிட்டது. அப்போது குஜராத் 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 107 ரன்கள் எடுத்திருந்தது. இதையடுத்து மழை நின்ற உடன் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓவரில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது.
வெற்றிபெற கடைசி ஓவரில் 15 ரன்கள் தேவைப்பட்டது. இறுதியில் 19வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 147 ரன்கள் எடுத்து மும்பையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. மும்பையின் தோல்விக்கு கடைசி ஓவரில் தீபக் சாஹர் வீசிய நோ பால் மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், இந்த போட்டியில் தோல்வி கண்ட பின்னர் மும்பை கேப்டன் பாண்ட்யா அளித்த பேட்டியில் கூறியதாவது, நாங்கள் சிறந்த போராட்டத்தை வெளிப்படுத்தினோம் என்று நினைக்கிறேன். ஒரு குழுவாக இணைந்து வெற்றியை நோக்கி போராடினோம். நிச்சயமாக இந்த பிட்சில் கூடுதலாக ரன்களை சேர்த்திருக்க முடியும். எனது கணிப்பின்படி மும்பை அணி 25 ரன்கள் குறைவாக எடுத்துவிட்டது.
ஆனாலும், இவ்வளவு அருகில் வந்து தோல்வியை பெறுவதற்கு பவுலர்கள்தான் காரணம். இந்த போட்டியில் கேட்ச்களை விடவும், நோ-பால்களை அதிகமாக வீசிவிட்டோம் என்று நினைக்கிறேன். அதிலும் கடைசி ஓவரில் வீசிய நோ-பால் பற்றி என்ன சொல்வதென தெரியவில்லை. டி20 கிரிக்கெட்டில் நோ-பால்களை வீசுவது பெருங்குற்றம் என்று கருதுவேன். ஏனென்றால் நோ-பால் மூலம் சேர்க்கப்படும் ரன்கள் நிச்சயம் நமக்கு பின் விளைவுகளை ஏற்படுத்தும்.
அதேபோல் மும்பை அணியின் அத்தனை வீரர்களும் 120 சதவீதம் தங்களின் பங்களிப்பை வழங்குவது மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால், குறைந்த ஸ்கோரை அடித்திருந்தாலும், கடைசி வரை போராடியுள்ளோம். மழை தொடர்ந்து கொண்டே இருந்தது. 2 முறை ஆட்டம் நிறுத்தப்பட்டு தொடங்கியது சரியாக அமையவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.