
கராச்சி,
காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் கடந்த 22-ந்தேதி பயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் நேபாள நாட்டை சேர்ந்த ஒருவர் உள்பட சுற்றுலாவுக்காக சென்றிருந்த 26 பேர் பலியானார்கள். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இருந்து செயல்பட்டு வரும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான 'தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்நிலையில், எல்லை கடந்த பயங்கரவாதத்திற்கு ஆதரவு அளித்தமைக்காக, பாகிஸ்தானுக்கு எதிராக கடுமையான நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது. அட்டாரி எல்லையில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி மூடல் மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம் தற்காலிக ரத்து என அடுத்தடுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டது.
பாகிஸ்தானியர்கள் இந்தியாவுக்குள் பயணிக்க அனுமதி மறுப்பு போன்ற நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டது. அவர்களை நாட்டில் இருந்து வெளியேறவும் இந்திய வெளியுறவு செயலகம் உத்தரவிட்டது. இந்திய வான்வெளியை பாகிஸ்தான் பயன்படுத்த முடியாத வகையில் அவற்றை இந்தியா மூடியது.
பாகிஸ்தானுடன் அனைத்து வகையான தபால் மற்றும் பார்சல் சேவையை நிறுத்தியது. பாகிஸ்தானை தாக்கவும் இந்தியா தயாரானது. இதனால் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உருவானது. இந்நிலையில், பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த துல்லிய தாக்குதலில், 9 பயங்கரவாத உட்கட்டமைப்புகள் இலக்காக கொள்ளப்பட்டன. இதில், பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.
இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் இன்று கூறும்போது, ராணுவம் தொடர்புடைய நடவடிக்கைகளுக்கு முழு அதிகாரம் கொடுத்துள்ளோம். பாகிஸ்தானியர்களின் உயிரை பறித்ததற்கு தக்க பதிலடி தரப்படும். தான் விரும்பும் நடவடிக்கையை எடுக்க ராணுவத்திற்கு முழு அதிகாரம் தரப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
இதனால், பயங்கரவாத இலக்குகளை குறி வைத்து, இந்தியா நடத்திய துல்லிய தாக்குதலுக்கு பதில் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் தயாராகி உள்ளது தெரிய வந்துள்ளது.
இதனை தொடர்ந்து, அந்நாட்டு பாதுகாப்பு மந்திரி கவாஜா ஆசிப் கூறும்போது, நிலைமை மோசமடையும்படியான நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டால் அது அணு ஆயுத போராக மாறலாம். அப்படி அணு ஆயுத போராக மாறினால் அதற்கு இந்தியாவே பொறுப்பு என கூறியுள்ளார்.