டி20 கிரிக்கெட்: விராட் கோலியின் வாழ்நாள் சாதனையை தகர்த்த பாபர் அசாம்

4 days ago 3

ஹோபர்ட்,

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட பாகிஸ்தான் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இதில் 3 போட்டிகளிலும் வெற்றி பெற்ற ஆஸ்திரேலியா சொந்த மண்ணில் பாகிஸ்தானை ஒயிட்வாஷ் ஆக்கியது.

இதில் நடைபெற்ற கடைசி போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த பாகிஸ்தான் அணி, ஆஸ்திரேலிய பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 18.1 ஓவர்களில் 117 ரன்களில் சுருண்டது. அதிகபட்சமாக பாபர் அசாம் 41 ரன்கள் அடிக்க, ஆஸ்திரேலிய தரப்பில் ஆரோன் ஹார்டி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

இதனையடுத்து 118 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி வெறும் 11.2 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 118 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. அதிகபட்சமாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் 27 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

இதன் மூலம் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றியை பதிவு செய்தது.

முன்னதாக இந்த ஆட்டத்தில் பாபர் அசாம் அடித்த 41 ரன்களையும் சேர்த்து இதுவரை டி20 கிரிக்கெட்டில் 4192 ரன்கள் அடித்துள்ளார். இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த 2-வது வீரர் என்ற விராட் கோலியின் வாழ்நாள் சாதனையை தகர்த்துள்ளார்.

இந்த பட்டியலில் ரோகித் சர்மா 4231 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார். எனினும் சர்வதேச டி20 கிரிக்கெட்டிலிருந்து விராட் மற்றும் ரோகித் ஓய்வு பெற்று விட்டதால் பாபர் அசாம் முதலிடத்திற்கு முன்னேற வாய்ப்புள்ளது.

அந்த பட்டியல்:-

1. ரோகித் சர்மா - 4231

2. பாபர் அசாம் - 4190 ரன்கள்

3. விராட் கோலி - 4188 ரன்கள்

4. பால் ஸ்டிர்லிங் - 3655 ரன்கள்

5. மார்ட்டின் குப்தில் - 3531 ரன்கள்

Read Entire Article