
தமிழகத்தில் டாஸ்மாக் நிறுவனம் மது கொள்முதல் செய்யும் ஆலைகள், மது விற்பனை நிறுவனங்கள், டாஸ்மாக் தலைமை அலுவலகம் என 20-க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள், கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 3 நாட்கள் வரை சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் தொடர்பான அறிக்கையை அமலாக்கத்துறை வெளியிட்டது. அதில், தமிழ்நாட்டில் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட பல்வேறு வழக்குகளின் அடிப்படையில் டாஸ்மாக் தலைமை அலுவலகம் உள்ளிட்ட இடங்களில் சோதனை நடத்தப்பட்டது.
அப்போது, டாஸ்மாக்கில் மது பாட்டிலுக்கு நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதலாக 10 முதல் 30 ரூபாய் வரை வசூல் செய்தது, டாஸ்மாக் அதிகாரிகளுக்கு மது ஆலைகளுடன் நேரடி தொடர்பு இருந்தது, கொள்முதலை குறைத்து காட்டியது, பணியிட மாற்றம், பார் லைசென்ஸ் உள்ளிட்டவைகளை வழங்க லஞ்சம் பெறப்பட்டது ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
டாஸ்மாக் உயர் அதிகாரிகளின் நெருக்கமானவர்களுக்கே ஒப்பந்தம் வழங்கப்பட்டு உள்ளதும் தெரிய வந்தது. இதுபோல பல முறைகேடுகள் மூலமாக டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு மேல் கணக்கில் காட்டப்படாத பணம் புழங்கியிருக்க வாய்ப்பு உள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இது தொடர்பாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், டாஸ்மாக்கில் ரூ. 1,000 கோடி முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக்கோரி சென்னை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் பதிவு செய்துள்ள வழக்குகளை சிபிஐ விசாரணை செய்யக்கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த ஐகோர்ட்டு, டாஸ்மாக் முறைகேடு வழக்கு தொடர்பாக தமிழக அரசு, மத்திய அரசு, அமலாக்கத்துறை, லஞ்ச ஒழிப்புத்துறை பதில் அளிக்கக்கோரி உத்தரவிட்டு வழக்கை ஒத்தி வைத்தது.