
சென்னை,
தமிழகத்தில் 'டாஸ்மாக்' மதுபான விற்பனை, கொள்முதல் முறைகேடு தொடர்பாக லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்திருந்தனர். அதனடிப்படையில் சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்' தலைமை அலுவலகம், 'டாஸ்மாக்' அதிகாரிகள் வீடு, மதுபான தயாரிப்பு ஆலைகள் உள்பட 20 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த மார்ச் 6-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது என்று அமலாக்கத்துறை சார்பில் பரபரப்பு அறிக்கை வெளியிடப்பட்டது. இந்த நிலையில், அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் என்றும், விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் தமிழக அரசு மற்றும் 'டாஸ்மாக்' நிர்வாகம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.இதில் அமலாக்கத்துறை விசாரணையை தொடரலாம் என்று ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இந்த தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டும் இந்த உத்தரவை உறுப்படுத்தியது. அதைத்தொடர்ந்து அமலாக்கத்துறை அதிகாரிகள் மீண்டும் விசாரணை களத்தில் இறங்கி உள்ளனர்.
நேற்று முன்தினம் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் விசாகனிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியிருந்த நிலையில் டாஸ்மாக் துணை மேலாளர் ஜோதி சங்கர் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராகி உள்ளார். நுங்கம்பாகத்தில் உள்ள அலுவலகத்தில் ஜோதி சங்கரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடிக்கு முறைகேடு நடந்துள்ளதாக குற்றம்சாட்டி அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.