
அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத் தலைவருமான ஆர்.பி. உதயகுமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
தி.மு.க.வின் விளையாட்டு மேம்பாட்டு அணிச் செயலாளர் தயாநிதி மாறன், தமிழக விளையாட்டுத் துறை மந்திரியைப் போலவே விளையாட்டுத்தனமாக அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.
தி.மு.க.விற்காக உழைத்த உண்மையான தொண்டர்கள் சந்தித்த எந்தவிதமான சிரமத்தையும் அனுபவிக்காமல் - உதாரணமாக, கொடி பிடிக்காமல், போஸ்டர் ஒட்டாமல், உண்ணாவிரதம் இருக்காமல், காவலர்களிடம் தடியடி படாமல், சிறை செல்லாமல், தேர்தல் வேலை பார்க்காமல், முரசொலி மாறனுக்கு மகனாக பிறந்த ஒரே காரணத்திற்காக நேரடியாக எம்.பி-ஆகவும், உடனே மத்திய அமைச்சராகவும் பதவி சுகத்தை அனுபவித்த தயாநிதி மாறன், இந்திய தொலைத் தொடர்பு நிறுவனத்தையே முடக்கிய பெருமை கொண்டவர், இத்தனை நாட்கள் இருந்த இடம் தெரியாமல் இருந்துவிட்டு, சுப்ரீம் கோர்ட்டு டாஸ்மாக் வழக்கிற்கு அளித்த இடைக்காலத் தடையில், தேவையில்லாமல் எங்களுடைய கழகப் பொதுச்செயலாளரை தொடர்புபடுத்தி அறிக்கை வெளியிட்டு, தனது இருப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.
உங்களது தந்தை முரசொலி மாறன் அப்போதைய மத்திய பா.ஜ.க. கூட்டணி அரசில், இந்திய வரலாற்றிலேயே இல்லாத வகையில் உடல் நிலை சரியில்லாமல், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தபோது, சுமார் ஓராண்டு காலம் இலாகா இல்லாத மந்திரியாக பதவி வகித்தபோது, அப்போது பா.ஜ.க.வை வானுயுர புகழ்ந்ததை மறந்துவிட்டீர்களா? இன்று தி.மு.க. அரசின் ஊழல்கள் மத்திய புலனாய்வுத் துறை மூலம் கண்டறியப்பட்டதை ஏற்றுக்கொள்ள முடியாமல், அருவருக்கத்தக்க அவதூறு செய்திகளை வெளியிட்டுள்ளீர்கள்.
இதே சென்னை ஐகோர்ட்டு, மத்திய அமலாக்கத் துறை 'தி.மு.க.வினர் டாஸ்மாக் மூலம் செய்த முறைகேடுகளை விசாரிக்கலாம்' என்று தீர்ப்பளித்தபோது, சப்பை கட்டு அறிக்கை வெளியிட்ட தயாநிதி மாறன் அப்போது எங்கே போனார்? பம்மிக் கிடந்தவர்கள் யார்?
முன்னாள் டாஸ்மாக் மந்திரி செந்தில் பாலாஜி வழக்கு, கள்ளக்குறிச்சி கள்ளச் சாராய வழக்கு, பல பாலியல் குற்ற வழக்குகள், போதைப் பொருள் நடமாட்ட வழக்குகள் போன்ற பல வழக்குகளில் ஐகோர்ட்டும், சுப்ரீம் கோர்ட்டும், ஆளும் தி.மு.க. அரசுக்கு குட்டு வைத்ததை வசதியாக மறந்துவிட்டாரா தயாநிதி மாறன்.
தற்போது இந்த ஒரு வழக்கின் இடைக்காலத் தடைக்கு வாயை திறந்துள்ள தயாநிதி மாறன், மற்ற வழக்குகளில் வாயை திறக்காதது ஏன்? மதுரையில் உங்களது தினகரன் நாளிதழ் அப்பாவி ஊழியர்கள் மூவர் எரித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் வாயைத் திறக்காத நீங்கள், இப்போது வாய் பேசுவது விந்தையிலும் விந்தை. அகால மரணமடைந்தவர்களின் ஆன்மா உங்களை மன்னிக்காது.
சுப்ரீம் கோர்ட்டு டாஸ்மாக் வழக்கில் அமலாக்கத் துறையின் விசாரணைக்கு தற்காலிக தடை வழங்கி உள்ளதற்கே இந்த ஆட்டம், பாட்டம் தேவையில்லை. இந்த வழக்கு மீண்டும் சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வரும்போது அமலாக்கத்துறை பதில் அளிக்கும்போது உண்மை நிலை வெளிச்சத்திற்கு வரும்.
ஸ்டாலின் மாடல் தி.மு.க. அரசு, டாஸ்மாக் விஷயத்தில் செய்த ஊழல்கள் அம்பலப்படுத்தப்படும் என்பதை இவர்கள் உணர வேண்டும். அப்போது நீங்கள் வெட்கித் தலைகுனியும் நிலையும் வரும் என்பதை உணர வேண்டும் என்று எச்சரிக்கிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.