சென்னை,
மத்திய கிழக்கு வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம், வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து நேற்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த நிலையில் இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக உருவாகியுள்ளது . இந்த புயலுக்கு 'டானா' புயல் என பெயரிடப்பட்டுள்ளது.
'டானா' புயல் வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஒடிசாவின் புரி பகுதிக்கும் சாகர் தீவுகளுக்கும் இடையே கரையைக் கடக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதனால் மணிக்கு 110 முதல் 120 கி.மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள 'டானா' புயல் 15 கி.மீ. வேகத்தில் நகர்ந்த நிலையில், தற்போது அதன் வேகம் சற்று குறைந்துள்ளது. கடந்த 6 மணி நேரத்தில், மணிக்கு 13 கி.மீ வேகத்தில் நகர்ந்து செல்கிறது. புயல் வடக்கு நோக்கி நகர்வதால், தமிழகத்துக்கு பெரிய மழை ஆபத்து இல்லை என்று கூறப்படுகிறது.