சென்னை,
கடந்த 2012-ம் ஆண்டு பிரபு சாலமனின் இயக்கத்தில் வெளியான கும்கி திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் விக்ரம் பிரபு . அந்த படம் பெரும் வரவேற்பை பெற்றது. அதனைத்தொடர்ந்து, இவர் நடித்த படங்கள் அவருக்கு பெரியளவில் கை கொடுக்கவில்லை.
கடந்த 2022-ம் ஆண்டு அவரது நடிப்பில் வெளியான டாணாக்காரன் திரைப்படத்தை நடிகரும் இயக்குநருமான தமிழ் இயக்கியிருந்தார். நேரடியாக ஓ.டி.டியில் வெளியான இப்படம் விக்ரம் பிரபுவிற்கு "கம் பேக்" ஆகவே அமைந்தது. கடைசியாக 2023-ம் ஆண்டு யுவராஜ் தயாளன் இயக்கிய இறுகப்பற்று திரைப்படத்தில் விக்ரம் பிரபு நடித்திருந்தார்.
இந்நிலையில், விக்ரம் பிரபுவின் அடுத்த படத்திற்கான பூஜை நேற்று நடைபெற்றது. அதன்படி, விக்ரம் பிரபுவின் அடுத்த படத்தை வெற்றிமாறனிடம் உதவி இயக்குனராக பணிபுரியும் சுரேஷ் இயக்குகிறார். இதன் மூலம் இவர் இயக்குனராக அறிமுகமாக உள்ளார். உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்டு உருவாகும் இப்படத்திற்கு 'டாணாக்காரன்' பட இயக்குனர் தமிழ் கதை எழுதி இருக்கிறார்.