ராமநாதபுரம்,
ராமநாதபுரத்தில் திமுக எம்.பி. கனிமொழி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரன் கடந்த 2014-ம் ஆண்டும் இதுபோன்ற செயலில் ஈடுபட்டவர். அப்போது அவர் மீது திருட்டு வழக்கு மட்டும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் அப்போதே அவர் மீது பாலியல் வழக்குபதிவு செய்யப்பட்டு இருந்தால் வழக்கு முறையாக விசாரிக்கப்பட்டு இருக்கும்.
அதிமுக ஆட்சியில் பொள்ளாச்சி சம்பவம் நடந்ததை யாரும் மறுக்க முடியாது. அப்போதைய அரசு பொள்ளாச்சி வழக்கில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆனால் இந்த வழக்கில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், குற்றம் நடந்த உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டதன் அடிப்படையில் சம்பந்தப்பட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். விரைவில் அவருக்கு சரியான தண்டனை கிடைப்பதற்கு இந்த அரசு வழிவகை செய்யும்.
பாமக கூட்டத்தில் டாக்டர் ராமதாஸ்-அன்புமணி இருவருக்கும் நடந்தது குடும்ப சண்டை. அதுகுறித்து நான் எந்த கருத்தும் சொல்ல முடியாது. அண்ணாமலைக்கு என்ன வேண்டுதல் என்று தெரியவில்லை தன்னைத்தானே சாட்டையால் அடித்துக் கொண்டார். ஒரு கட்சியில் ஆயிரம் பேர் பயணிப்பார்கள். அதில் நல்லவர் கெட்டவரை கண்டுபிடிப்பது எளிதல்ல.
அண்ணா பல்கலைக்கழக பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகருக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என நீதிமன்றத்தில் தெளிவுபடுத்தப்பட்டு உள்ளது. முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் எந்த கட்சியினராக இருந்தாலும் பாரபட்சம் இன்றி உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார். அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.