டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு நாளை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் அமைச்சர்கள்

3 months ago 17

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். ஏ.பி.ஜே. அப்துல் கலாம் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் சார்பில், அமைச்சர்கள் 15.10.2024 அன்று காலை 9.30 மணியளவில் சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அமைந்துள்ள அவருடைய திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்துகிறார்கள். டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் ஜைனுலாப்தீனுக்கும், ஆஷியம்மாவுக்கும் மகனாக இராமநாதபுரம் மாவட்டம் இராமேஸ்வரத்தில் 15.10.1931 அன்று பிறந்தார். டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் தம் பள்ளிப்படிப்பைத் இராமேஸ்வரத்தில் தொடங்கி, உயர்படிப்பை திருச்சிராப்பள்ளியிலுள்ள “செயின்ட் ஜோசப் கல்லூரியில்” இயற்பியலில் இளங்கலை பட்டம் பெற்றார். தொடர்ந்து சென்னையிலுள்ள எம்.ஐ.டி-யில் 1955 ஆம் ஆண்டு “விண்வெளி பொறியில் படிப்பை” முடித்து, பின்னர் அதே கல்லூரியில் முதுகலைப் பட்டமும் பெற்று அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்தார். அவருடைய எண்ணப்படி மக்களுக்கான அரசின் திட்டங்கள் கிராமங்கள் மற்றும் நகரங்கள் இடையே வேறுபாடின்றி எல்லோருர்க்கும் சென்றடைய வேண்டும்.

மேலும், அனைவர்க்கும் குடிநீர், எரிசக்தி, விவசாயம், தொழில், சேவை, ஒருங்கிணைந்த முன்னேற்றம், சமூகப் பொருளாதாரம், பண்பாட்டுடன் சிறந்த கல்வி, தரமான மருத்துவ வசதி கிடைக்கப் பெற வேண்டும். வறுமை ஒழிக்கப்பட்டு கல்லாமை இன்றி, பெண்கள், குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் 1960 ஆம் ஆண்டு வானூர்தி அபிவிருத்தி அமைத்தல் பிரிவில் (DRDO) விஞ்ஞானியாக தம்முடைய ஆராய்ச்சி வாழ்க்கையைத் தொடங்கினார். பின்னர், இந்திய விண்வெளி ஆராய்ச்சிக் கூடத்தில் (ISRO) தமது ஆராய்ச்சிப்பணிகளைத் தொடர்ந்த இவர், துணைக்கோள் ஏவுகணைக் குழுவில் (SLV) செயற்கைக்கோள் ஏவுதலில் முக்கியப் பங்காற்றினார். 1980 ஆம் ஆண்டு SLV -III ராக்கெட்டைப் பயன்படுத்தி ரோகினி-I என்ற துணைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவச்செய்தார். இது அவருக்கு மட்டுமல்லாமல், இந்தியாவிற்கே ஒரு சாதனையாக அமைந்தது.

இத்தகைய வியக்கத்தக்க செயலைப் பாராட்டி ஒன்றிய அரசு இவருக்கு 1981 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப் பெரிய விருதான “பத்ம பூஷண்” விருது , 1990 ஆம் ஆண்டு “பத்ம விபூஷண்” விருது ஆகியவற்றை வழங்கி சிறப்பித்துள்ளது. டாக்டர். ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் பிரமோஸ் ஏவுகணை உருவாக்குதல், 1960 ஆம் ஆண்டு இந்திய ராணுவத்துக்குத் தேவையான சிறிய ரக ஹெலிகாப்டரை வடிவமைத்துக் கொடுத்தல், SLV, SLV-3, ரோகினி-1, செயற்கைக்கோள் ஏவுதல் ஆகியவற்றில் முக்கியப் பங்காற்றினார். மேலும், திரிசூல், அக்னி, பிருத்வி, நாக், ஆகாஷ் போன்ற ஏவுகணைகள் இவர் திட்ட இயக்குநராக இருந்தபோது கண்டுபிடிக்கப்பட்டவையாகும். 1999 ஆம் ஆண்டு பொக்ரான் அணு ஆயுதச் சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றினார்.

மேலும், கால்கள் பழுது பட்டவர்களுக்கான எடை குறைந்த செயற்கை மாற்றுக் கால்கள் உருவாக்கிக் கொடுத்தார். டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் இளைஞர்களை ‘கனவு காணுங்கள்’ என்று கூறினார். இதனால் கோடிக்கணக்கான இளைஞர்களின் மனதில் நீங்காப் புகழோடு வாழ்கிறார். அப்துல் கலாம் இந்திய விண்வெளித் துறையில் இவர் நிகழ்த்திய சாதனைகள் மூலம் அனைவராலும் போற்றப்பட்டு, 2002 ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசுத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்று, இந்தியாவின் 11 வது குடியரசுத் தலைவராக 2002 ஜூலை 25 ஆம் நாள் பதவியேற்றார். குடியரசு தலைவராவதற்கு முன், இந்தியாவின் மிகப்பெரிய விருதான “பாரத ரத்னா விருதை” ஒன்றிய அரசு இவருக்கு வழங்கிப் போற்றிப் பாராட்டியது. இதன் மூலம், “பாரத ரத்னா” விருது பெற்ற மூன்றாவது குடியரசுத் தலைவர் என்ற பெருமையை இவர் பெற்றார். 2007 ஆம் ஆண்டு வரை குடியரசுத் தலைவராகத் திகழ்ந்த இவர், “மக்களின் ஜனாதிபதி” என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்பட்டார். டாக்டர் ஏ. பி. ஜே. அப்துல் கலாம் அவர்கள் ”குழந்தைகளுக்குக் கனவு உண்டு. அந்தக் கனவை நனவாக்கும் லட்சியம் அந்தக் குழந்தைகளிடம் மிகுந்திருக்கும் என கூறினார்.

“அக்னிச் சிறகுகள், இந்தியா 2020, வெளிச்சப் பொறிகள், மிஷன் இந்தியா, திருப்புமுனைகள்: சவால்களுக்கு இடையே ஒரு பயணம், எனது பயணம், ” போன்ற புத்தகங்களை எழுதியுள்ளார். நாட்டு மக்களால் பெரிதும் போற்றப்பட்ட டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்கள் 2015-ஆம் ஆண்டு ஜூலை 27 ஆம் நாள் இயற்கை எய்தினார். இத்தகைய போற்றலுக்கும் மரியாதைக்கும் உரிய முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் புகழுக்குப் பெருமை சேர்க்கின்ற வகையில் மு.க.ஸ்டாலின், தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை, கிண்டி, அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் அவருடைய திருவுருவச் சிலையை நிறுவி, அவர்களின் திருக்கரங்களால் 15.10.2023 அன்று திறந்து வைத்தார்கள். தமிழ்நாடு அரசின் சார்பில் ஆண்டுதோறும் டாக்டர் ஏ.பி.ஜே அப்துல்கலாம் அவர்களின் பிறந்த நாளான அக்டோபர் 15 ஆம் நாள் அரசு விழாவாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

The post டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு நாளை அவரது சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தும் அமைச்சர்கள் appeared first on Dinakaran.

Read Entire Article