டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் ரத்து முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா: அரிட்டாபட்டியில் 48 கிராம மக்கள் சார்பில் நடைபெறுகிறது

2 weeks ago 1

சென்னை: டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான ஏலம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அரிட்டாபட்டி கிராமத்திற்கு நேரில் சென்று அப்பகுதி மக்களை சந்திக்கிறார். அங்கு அரிட்டாபட்டி உள்ளிட்ட 48 கிராம மக்கள் ஒன்று கூடி முதல்வரை வரவேற்று நேரில் நன்றி தெரிவிக்கிறார்கள். மதுரை மாவட்டம் மேலூர் அருகே அரிட்டாபட்டி பகுதியில் 2015 ஹெக்டேர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கான குத்தகைக்கு ஒன்றிய அரசு ஏல அறிவிப்பை வெளியிட்டது.

இந்த டெண்டர் தூத்துக்குடி ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தாவின் துணை குழுமமான ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டு இருந்தது. இதற்கு மதுரை அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 50 கிராம மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினர். தமிழக சட்டப்பேரவையில் டங்ஸ்டன் சுரங்க அனுமதிக்கு எதிராக அரசு சார்பில் தனி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போது பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின், ‘‘நான் ஆட்சியில் இருக்கும் வரை மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க விடமாட்டேன்.

அப்படி டங்ஸ்டன் சுரங்கம் வந்தால் நான் முதல்வர் பொறுப்பில் இருக்க மாட்டேன்” என சூளுரைத்தார்.இதைத்தொடர்ந்து, ஜனவரி 7ம் தேதி மேலூர் அருகே சிட்டம்பட்டி சுங்கச்சாவடியில் இருந்து சுமார் 15 கி.மீ நடைபயணமாக மதுரை வந்த போராட்ட குழுவினர் தல்லாகுளம் தபால் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். டங்ஸ்டன் திட்டத்தை கொண்டு வந்த பாஜக மீது மக்கள கடும் அதிருப்பதியில் இருந்தனர்.

அதை சரிக்கட்டுவதற்காக, தமிழக பாஜ மாநில தலைவர் அண்ணாமலையும், டங்ஸ்டன் எதிர்ப்பு போராட்ட குழுவினருடன் கடந்த சில நாட்களுக்கு முன் டெல்லி சென்று ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியை சந்தித்து கோரிக்கைகளை வைத்தார். இந்நிலையில், தமிழக மக்கள் மற்றும் ஆளுங்கட்சியின் கடுமையான எதிர்ப்பை அடுத்து டங்ஸ்டன் சுரங்க ஏல அனுமதியை முழுவதுமாக ரத்து செய்துள்ளதாக ஒன்றிய அரசு நேற்று முன்தினம் அறிவித்தது. இதனால், மேலூர் பகுதி கிராம மக்கள், விவசாயிகள் உட்பட பல்வேறு தரப்பினரும் நிம்மதி அடைந்தனர்.

ஒன்றிய அரசின் அறிவிப்பை அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்கள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கி, ஆடிப்பாடி கொண்டாடினர். இந்த நிலையில், டங்ஸ்டன் சுரங்க விவகாரத்தில் உடனடியாக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியதுடன், மதுரை மக்களுக்கு சட்டப்பேரவையில் பகிரங்கமாக உறுதிமொழி அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் விழா இன்று அரிட்டாபட்டியில் நடைபெறவுள்ளது.

இந்த நன்றி தெரிவிக்கும் விழாவில் முதல்வர் நேரில் கலந்து கொள்ள வேண்டும் என்று, அரிட்டாபட்டி மற்றும் சுற்றுவட்டார கிராமத்தில் உள்ள முக்கிய நபர்கள் நேற்று சென்னை வந்து முதல்வர் மு.க.ஸ்டாலினை தலைமை செயலகத்தில் சந்தித்து அழைப்பு விடுத்தனர். அவர்களின் அழைப்பை முதல்வர் மு.க.ஸ்டாலினும் ஏற்றுக்கொண்டார். இதையடுத்து, இன்று ஜனவரி 26ம் தேதி அரிட்டாபட்டி கிராமத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செல்கிறார். இன்று காலை சென்னையில் குடியரசு தின நிகழ்ச்சிகளை முடித்துக்கொண்டு மதியம் 11.30 மணி அளவில் விமானம் மூலமாக மதுரை செல்கிறார்.

பின்னர் இன்று மாலை அங்கிருந்து சாலை மார்க்கமாக அரிட்டாபட்டி சென்று, 48 கிராம மக்கள் ஒன்றுகூடி அளிக்கும் நன்றி தெரிவிக்கும் நிகழ்ச்சியில் முதல்வர் பங்கேற்கிறார். இதற்கான ஏற்பாடுகளை டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்திய குழுவினர் செய்து வருகிறார்கள். இந்த நிகழ்ச்சியில் வணிகவரித்துறை அமைச்சர் மூர்த்தி உள்ளிட்ட பலரும் கலந்து கொள்கிறார்கள்.

* ஆளுநர் அளிக்கும் தேநீர் விருந்து தமிழ்நாடு அரசு புறக்கணிப்பு
குடியரசு தினத்தை முன்னிட்டு ஒவ்வோர் ஆண்டும் ஆளுநர் மாளிகையில் நடைபெறும் தேநீர் விருந்தில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்பது வழக்கம். இதற்காக அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. தற்போது ஆளுநர் ஆர்.என்.ரவி அளிக்கும் தேநீர் விருந்தில் தமிழக அரசு பங்கேற்காது என தகவல் வெளியாகி உள்ளன. ஏற்கனவே, காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட் கட்சிகள் ஆளுநரின் தேநீர் விருந்தை புறக்கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

The post டங்ஸ்டன் சுரங்கம் திட்டம் ரத்து முதல்வர் ஸ்டாலினுக்கு இன்று பாராட்டு விழா: அரிட்டாபட்டியில் 48 கிராம மக்கள் சார்பில் நடைபெறுகிறது appeared first on Dinakaran.

Read Entire Article