மதுரை,
மதுரை மாவட்டம், மேலூர் அருகே அரிட்டாபட்டி கிராமத்தில் வேதாந்தா நிறுவனத்தின் துணை நிறுவனமான இந்துஸ்தான் ஸிங்க் நிறுவனம், டங்ஸ்டன் கனிமத்தை வெட்டி எடுக்க மத்திய அரசிடம் ஒப்புதல் பெற்றுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, உள்ளாட்சி தினமான இன்று நடைபெற்ற அரிட்டாபட்டி கிராம சபை கூட்டத்தில், ஒருமித்த ஆதரவோடு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்த கிராம சபை கூட்டத்தில், தமிழக வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, மேலூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வம் ஆகியோர் பங்கேற்றனர். பின்னர் கூட்டத்தில் பேசிய அமைச்சர் மூர்த்தி, தமிழக அரசு மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதல் இல்லாமல் டங்ஸ்டன் எடுக்க முடியாது என்றார். இந்த மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு தமிழக அரசு 100 சதவீதம் அனுமதி தராது என்றும், இது தொடர்பாக யார் ஆய்வு செய்ய வந்தாலும் கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.