டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்: அரசின் தனித்தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம்

2 months ago 7

சென்னை: மதுரை மாவட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்துக்கு ஒன்றிய அரசு வழங்கிய அனுமதியை ரத்து செய்ய வலியுறுத்தி சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தமிழக சட்டப்பேரவையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் 2024-25ம் நிதி ஆண்டில் கூடுதலாக ஏற்பட்டுள்ள செலவுக்காக நிதி ஒதுக்கி துணை பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதை தொடர்ந்து, நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், அரசினர் தனித்தீர்மானம் ஒன்றை கொண்டு வந்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:

மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது. இத்தகைய இன்றியமையாத மற்றும் முக்கிய கனிமங்களுக்கான உரிமங்களை மாநில அரசுகளின் அனுமதியின்றி, ஒன்றிய அரசு ஏலம் விடக்கூடாது என்று கடந்த 2023 அக்டோபர் 3ம் தேதி தமிழக அரசு வலியுறுத்தியிருந்தும், இந்த எதிர்ப்பை கருத்தில் கொள்ளாது, ஒன்றிய அரசு இத்தகைய ஏல நடவடிக்கையை மேற்கொண்டது கண்டிக்கத்தக்கது.

இந்த டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதி குடைவரை கோயில்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி வட்டெழுத்துக்கள், பஞ்சபாண்டவர் படுக்கைகள் போன்ற பல வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியதாகவும், அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமாகவும் இருப்பதை கருத்தில் கொண்டு, இப்பகுதி ஒரு பல்லுயிர்ப் பெருக்கத் தலமாக கடந்த 2022ம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டிருப்பதை சுட்டிக் காட்டிய நிலையிலும், அப்பகுதியில் சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கான உரிமம் ஒன்றிய அரசால் அளிக்கப்பட்டுள்ளது. இதை தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டு மக்களும், ஒருபோதும் ஏற்றுக் கொள்ளமாட்டார்கள்.

இப்பகுதியில் வாழும் மக்களின் வாழ்வாதாரம் நிரந்தரமாக பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வை ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கை ஏற்படுத்தியுள்ளதால், அப்பகுதி மக்கள் இதனை எதிர்த்து பல போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு, இப்பகுதியையும், அந்த பகுதியில் வாழும் மக்களையும் பாதுகாக்கும் பொருட்டு, இந்துஸ்தான் ஜங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு டங்ஸ்டன் கனிமச் சுரங்க ஒப்பந்தம் வழங்கிய ஒன்றிய அரசின் நடவடிக்கையை கைவிடுமாறு முதல்வர், பிரதமரை ஏற்கனவே வலியுறுத்தியுள்ளார்.

இந்த சூழ்நிலையில், மதுரை மாவட்டம் மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் இந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட டங்க்ஸ்டன் சுரங்க உரிமத்தை உடனடியாக ரத்து செய்திடவும், மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்த சுரங்க உரிமத்தையும் வழங்கக் கூடாது என்றும், ஒன்றிய அரசை வலியுறுத்தி இந்த பேரவை ஒருமனதாக தீர்மானிக்கிறது. இவ்வாறு தீர்மானத்தில் கூறப்பட்டிருந்தது.

தமிழக அரசு கொண்டு வந்த தனி தீர்மானத்தை ஆதரித்து உறுப்பினர்கள் வேல்முருகன் (தவாக), ஈஸ்வரன் (கொமதேக), அப்துல் சமது (மமக), சதன் திருமலைக்குமார் (மதிமுக), மாரிமுத்து (இந்திய கம்யூனிஸ்ட்), சின்னதுரை (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்), சிந்தனைச்செல்வன் (விடுதலை சிறுத்தைகள் கட்சி), நயினார் நாகேந்திரன் (பாஜ), ஜி.கே.மணி (பா.ம.க.), அசோகன் (காங்கிரஸ்) எடப்பாடி பழனிசாமி (அதிமுக) ஆகியோர் தீர்மானத்தை ஆதரித்து பேசினார்கள். இதையடுத்து சபாநாயகர் மு.அப்பாவு, தனித்தீர்மானம் மீது குரல் வாக்கெடுப்பு நடத்தி, தனித் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியதாக அறிவித்தார்.

* மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், நாயக்கர்பட்டி கிராமத்தில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமைப்பதற்கான உரிமத்தை இந்துஸ்தான் ஜங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு ஒன்றிய அரசு வழங்கியுள்ளது.

* இன்றியமையாத மற்றும் முக்கிய கனிமங்களுக்கான உரிமங்களை மாநில அரசுகளின் அனுமதியின்றி, ஒன்றிய அரசு ஏலம் விடக்கூடாது என்று 2023 அக்டோபர் 3ம் தேதி தமிழக அரசு வலியுறுத்தியிருந்தது.

* டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட பகுதி குடைவரை கோயில்கள், சமணச் சின்னங்கள், தமிழ் பிராமி வட்டெழுத்துக்கள், பஞ்சபாண்டவர் படுக்கைகள் போன்ற பல வரலாற்று சின்னங்களை உள்ளடக்கியது.

The post டங்ஸ்டன் சுரங்க உரிமத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும்: அரசின் தனித்தீர்மானம் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றம் appeared first on Dinakaran.

Read Entire Article