மதுரை: மதுரை மாவட்டம், மேலூர் தாலுகா அரிட்டாபட்டி உள்ளிட்ட 11 ஊர்கள் அடங்கிய பகுதியில் 5 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க ஒன்றிய அரசு முடிவு செய்தது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இதையடுத்து உள்ளாட்சிகள் தினத்தன்று அரிட்டாபட்டியில் நடந்த ஊராட்சி கூட்டத்தில் பங்கேற்ற அமைச்சர் பி.மூர்த்தி, டங்ஸ்டன் சுரங்க ஆய்விற்கு கூட தமிழ்நாடு அரசு ஒரு போதும் அனுமதி தராது என உறுதியளித்தார்.
அரிட்டாபட்டி, மீனாட்சிபுரம், தெற்குத்தெரு, நரசிங்கம்பட்டி, புலிப்பட்டி, எட்டிமங்கலம், வெள்ளரிப்பட்டி, கிடாரிப்பட்டி, ஆமூர் மற்றும் எட்டிமங்கலம், சென்னகரம்பட்டி, கம்பூர், கேசம்பட்டி, கருங்காலக்குடி, அய்யாபட்டி, கச்சிராயன்பட்டி மற்றும் தும்பைப்பட்டி உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் நடந்த கிராம சபை கூட்டத்தில் டங்ஸ்டன் சுரங்கத்திற்கு எதிராக தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதனிடையே நேற்று நடந்த தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தில் அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டத்திற்கு எதிராக கொண்டு வரப்பட்டு அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
இதற்காக தமிழ்நாடு அரசு மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், அரிட்டாபட்டி மற்றும் அ.வல்லாளப்பட்டி வெள்ளி மலையாண்டி கோயில் முன்பு திரண்ட விவசாயிகள் பட்டாசுகள் வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தீர்மானத்தை நிறைவேற்றிய முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு தங்களது நன்றியை தெரிவித்துக் ெகாண்டனர்.
இதுகுறித்து மதுரை எம்பி சு.வெங்கடேசன் கூறுகையில், ‘‘தீர்மானத்தைக் கொண்டுவந்த முதல்வருக்கும், நிறைவேற்றித் தந்த அனைத்து எம்எல்ஏக்களுக்கும் மதுரை மக்கள் சார்பில் நன்றி. தமிழ்நாட்டின் வளத்தையும் வரலாற்றையும் அழிக்கும் முயற்சிகளை ஒன்றிணைந்து முறியடிப்போம்’’ என்றார்.
தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறுகையில், ‘‘தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பதுடன், டெண்டர் அறிவிப்பில் இருந்து அரிட்டாபட்டி டங்ஸ்டன் திட்டம் கைவிடப்பட்டதாக அறிவிக்கிற வரை போராட்டத்தை தீவிரப்படுத்துவோம்’’ என்றார்.
முல்லை பெரியாறு ஒருபோக விவசாயிகள் நலச்சங்க நிர்வாகி வழக்கறிஞர் பி.ஸ்டாலின் ‘‘அனைத்து எம்பிக்களும் சேர்ந்து மக்களவை மற்றும் மாநிலங்களவையில் தீர்மானம் கொண்டு வந்து திரும்ப பெற வைக்க வேண்டும். பாதுகாக்கப்பட்ட புராதன சின்னமாக அறிவிக்க வேண்டும்.’’ என்றார்.
The post டங்ஸ்டன் கனிம சுரங்கத்திற்கு எதிராக பேரவையில் தீர்மானம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு மதுரை மக்கள் பாராட்டு: பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாட்டம் appeared first on Dinakaran.