ஜோலார்பேட்டை அருகே கி.பி 15ம் நூற்றாண்டை சேர்ந்த போர்வீரன் நடுகல் கண்டெடுப்பு

1 month ago 6

Jollapettai, nadukalஜோலார்பேட்டை : ஜோலார்பேட்டை அருகே கி.பி. 16ம் நூற்றாண்டை சேர்ந்த போர் வீரன் நடுக்கல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம், தாமலேரிமுத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட பெருமாள் கோயில் வட்டம் என்ற இடத்தில்கி.பி. 16ம் நூற்றாண்டை சேர்ந்த விஜயநகர மன்னர்கள் ஆட்சிக்காலத்தைய நடுகல் கண்டறியப்பட்டது.

திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஆ.பிரபு மற்றும் சமூக ஆர்வலர் வே.ராதாகிருஷ்ணன், முத்தமிழ்வேந்தன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் இச்சிற்பம் கண்டறியப்பட்டுள்ளது. இதுகுறித்து கல்லூரி தமிழ்த்துறை உதவிப் பேராசிரியர் ஆ.பிரபு கூறியதாவது:
தாமலேரிமுத்தூர் ஊராட்சி கிராம நிர்வாக அலுவலர் அறவேந்தன் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு கள ஆய்வினை மேற்கொண்டோம். அப்போது மண்ணில் புதைந்த நிலையில் இருந்த நடுகல் ஒன்று அங்கிருப்பதை உறுதி செய்தோம். தொடர்ந்து மண்ணில் புதைந்த நிலையில் இருந்த நடுகல் அகழ்ந்தெடுத்து மீட்கப்பட்டது. அந்நடுகல் அப்பகுதியில் வாழும் பூர்வகுடி மக்களான ஆதிதிராவிடர்களால் வழிபட்டு வருகிறது.

இதுகுறித்து அந்நடுகல்லினை பல தலைமுறைகளாகப் பராமரித்து வரும் பூசாரி ராஜா என்பவர், இது எங்கள் குலசாமியாகும். வீரனன் என்ற பெயரில் ஒரு காலத்தில் இப்பகுதியில் நடந்த போரில் மன்னருக்கு உதவியாக எங்கள் முன்னோர் போர்க்களத்தில் போரிட்டு இறந்ததால், இந்த இடத்தில் சுவாமியாக இருக்கிறார். சித்திரை மாதம் முழுநிலவன்று இவ்வீரனுக்கு திருவிழா எடுப்போம். இவ்வூரில் ஆதிதிராவிடர்கள் மட்டும் வழிபடும் தெய்வம் இவர் என கூறுகிறார்.

மேலும், பண்டையக் காலத்தில் வீரமரணம் அடைந்த அரசர்களுக்கும், வீரர்களுக்கும் நடுகல் வைத்துப் போற்றும் வழக்கம் இருந்துள்ளது. நிரை கவர்தல், நிரை மீட்டல், ஊரை எதிரிகளிடமிருந்து காத்தல், விலங்குகளுடன் சண்டையிட்டு விளை நிலங்களையும் மக்களையும் காத்தல் மற்றும் அரசனின் வெற்றிக்காகப் போரிடும் போது உயிரிழந்த வீரர்களின் நினைவாகவும் நடுகற்கள் நட்டு வழிபாடு செய்வது தொல்காப்பியர் காலம் முதல் தமிழர்களிடையே காணப்படும் வழக்கமாகும்.

வட தமிழகத்தில் நடுகற்களின் எண்ணிக்கை மிக அதிகமாகவே காணப்படுகின்றது. இதற்குக் காரணம் ஆந்திரா, கர்நாடகா என்ற இரண்டு மாநில எல்லைகள் வட தமிழகத்தில் இருப்பதால், பெரும்பாலும் அவை போர்க்களங்களாக இருந்திருக்க வாய்ப்பு இருக்கிறது. ஆகவே இப்பகுதியில் நடுகற்கள் மிக அதிக அளவில் காணப்படுகின்றன. மேலும் தாமலேரிமுத்தூரில் உள்ள இந்த நடுகல்லானது மிக நேர்த்தியாகப் போர்க்களத்தில் போரிடும் காட்சியை விவரிக்கும் வரலாற்றுத் தடயமாக விளங்குகின்றது.

நடுகல் 3 அடி அகலம், 4அடி உயரமும் கொண்டதாக உள்ளது. புடைப்புச் சிற்பமாக நடுகல் காட்சி விவரிக்கப்பட்டுள்ளது. அந்த நடுகல்லானது மிக நுணுக்கமான வேலைப்பாடுகளுடன், பக்கவாட்டில் போர்வீரன் கோபக்கனலோடு போரிடுவது போல் செதுக்கப்பட்டுள்ளது. வீரனது இடது கையில் கேடயத்தினை ஏந்திய நிலையில் அவர்தம் வலதுக்கரத்தில் கட்டாரி என்ற தனித்துவமான வாளினால் தாக்க முற்படுவதுபோல் காணப்படுகின்றார். தலையில் கொண்டையும் காதுகளில் குண்டலமும், இடையில் சிறிய தற்காப்புக் கத்தியும் அலங்கரிக்கரிக்கப்பட்ட கச்சையுடன் காணப்படுகின்றது.

கொண்டையினைச் சுற்றியும் இடையிலும் பறக்கும் நிலையில் அலங்காரத்துணி கட்டப்பட்டுள்ளது. இது போர்வீரன் பாய்ந்து போரிடுவதைக் குறிப்பிடுவதாகும். தமிழர்களின் போர் நிகழ்வு எத்தகைய வீரமிக்கது என்பதற்கு இந்த நடுகல் ஒரு சான்றாகும். இந்நடுகல் விஜயநகர மன்னர்கள் ஆட்சிசெய்த தொடக்க காலத்தைச் சேர்ந்ததாக இருப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதாவது கி.பி. 15ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தது.

அன்றைய காலப் போர்க்கள நிகழ்வை நம் கண்முன் எடுத்துரைத்து, தமிழர்களின் வீரத்திற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் இந்நடுகல் ரயில்வே விரிவாக்கப்பணியின் போது மண்மூடிய நிலையில் இருந்தது. தற்போது அப்பகுதி மக்களின் ஒத்துழைப்போடு அதே இடத்தில் நடுகல் வழிபட ஆவண செய்திட முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தமிழகத்தில் எஞ்சி நிற்கும் பல நடுகற்கள் இன்றுவரை பாதுகாப்பாக இருக்கின்றன என்றால் அது மக்களின் வழிபாட்டில் இருக்கின்ற காரணத்தினால்தான் என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும். பொதுமக்கள் விழிப்புணர்வோடு இது போன்ற வரலாற்று ஆவணங்களை பாதுகாப்பதில் அக்கறை செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post ஜோலார்பேட்டை அருகே கி.பி 15ம் நூற்றாண்டை சேர்ந்த போர்வீரன் நடுகல் கண்டெடுப்பு appeared first on Dinakaran.

Read Entire Article