பொதுவாக நான் அதிகம் ஜாதகம் பார்ப்பதைவிட, வருகின்றவர்களிடம் ஜாதகம் குறித்த பல்வேறு விளக்கங்களைச் சொல்லி அனுப்புவதில்தான் கவனம் செலுத்துவேன்.
அப்படித்தான் ஒரு நண்பர் சில வாரங்களுக்கு முன், வந்தார். என் கட்டுரைகளைப் படித்திருப்பதாகச் சொன்னார். பிறகு ஒரு கேள்வி கேட்டார். “சார், ஒருவருடைய ஜன்ம ஜாதகம் என்பது அவருடைய கர்மாவின் அடிப்படையில் தீர்மானம் செய்யப்பட்டது. எப்பொழுது கல்யாணம் நடக்கும்? எப்பொழுது குழந்தை பிறக்கும்? எத்தனை குழந்தை பிறக்கும்? எவ்வளவு கடன்? எவ்வளவு லாபம்? என்ன நோய்? எப்பொழுது ஆயுள் முடியும்? இப்படி ஒவ்வொன்றும் ஏற்கனவே திட்டமிட்டபடிதான் நடக்கிறது என்று சொன்னால், மாறாத ஜாதக பலன்கள் குறித்து நாம் கவலைப்பட்டு என்ன ஆகப்போகிறது? இந்த ஜாதக பலன்கள் மாறப்போவதில்லை என்று சொன்னால், எதற்காக ஜாதகம் பார்க்க வேண்டும்?’’ என்றுகேட்டார்.
“நல்ல நியாயமான கேள்வி” என்று பாராட்டிவிட்டுச் சொன்னேன்.. “பொதுவாகவே ஜோதிடர்கள் ஆன்மிகம் வேறு, ஜோதிடம் வேறு என்கின்ற ஒரு நிலைக்கு வந்து விட்டார்கள். தெய்வ நம்பிக்கை இல்லாதவர்கள்கூட ஜோதிடம் பார்க்கலாம். காரணம், அது ஒரு கணித அறிவியல் (mathematical science) போன்ற ஒரு விஷயம்தான் என்ற ஒரு நிலைமைக்கு வந்துவிட்டார்கள். என்னைப் பொருத்தவரையில், ஜோதிட சாஸ்திரத்தை அப்படி நினைக்கவில்லை. ஜோதிட சாஸ்திரத்தைக் கொடுத்த ரிஷிகள், பராசரராக இருக்கட்டும், வேறு ரிஷிகளாக இருக்கட்டும், அவர்கள் ஏதோ ஒரு விதத்தில் இந்த மனித குலம் ஜோதிட சாஸ்திரத்தால் பயனடைய வேண்டும் என்று மிகவும் முயற்சித்துத்தான் ஜோதிட சாஸ்திரத்தைக் கொடுத்திருக்கிறார்கள். இன்றைக்கு ஒரு ஜோதிடர் ஒரு ஜாதகம் பார்த்தால், ஏதோ ஒரு பணபலன் (consutation fees) பெறுகின்றார்.
ஆனால், இதற்கு மூல காரணமாக விளங்கிய ரிஷிகள், காட்டிலே கடும் தவம் புரிந்து, மிகவும் கடுமையாக உழைத்து, இந்த ஜோதிட சாஸ்திரத்தை வரையறுத்துக் கொடுத்தவர்கள். அதனால், எந்த பண பலனும் பெறவில்லை. அதனால் அவர்கள் சொன்ன விஷயம் தவறாக இருப்பதற்கு வாய்ப்பு இல்லை. ஆனால், அவர்களுடைய நோக்கம் ஒரு சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு இந்த ஜோதிட சாஸ்திரத்தை பயன்படுத்துவதற்காகத் தரவில்லை. என்ன கஷ்டம் இருந்தாலும், ஆன்ம பலத்தோடு, கஷ்டங்களை வென்று, முடிவில் பிறப்பில்லாத ஒரு நிலையைப் பெற வேண்டும் என்பதற்காகத்தான், ஜோதிட சாஸ்திரத்தைக் கொடுத்தார்கள் என்பதால், ஜோதிட சாஸ்திரம் என்பது ஆன்மிக விழிப்புணர்வு பெறுவதற்கு ஒரு வழி என்றுதான் நான் கருதுகின்றேன்.
இப்பொழுது நீங்கள் ஒரு கேள்வி கேட்டீர்கள். ஜோதிடம் என்பது, பிறவி ஜாதகம் (birth chart) என்ன அமைப்பில் இருக்கிறதோ, அதன் பிரகாரம்தான் எல்லாம் நடக்கும் என்று சொன்னால், அதை ஏன் பார்க்க வேண்டும்? அது மாறுவதற்கு வழி இல்லையா? என்று கேட்டீர்கள். இதற்கு உங்களுக்கு ஆன்மிகம்தான் (கர்மா தியரி) வழி சொல்லும். ஒருவருடைய ஜாதகம் என்பது அவருடைய பூர்வ கர்ம வினையின் அடிப்படையில் அமைவது என்பதை எல்லோரும் ஒத்துக் கொள்வார்கள். பூர்வ கர்ம வினை என்பது, ஆன்மிகத்தில் மூன்று பிரிவாகச் சொல்லப்படுகிறது. பல ஜென்மங்களாக செய்த பாவ புண்ணியங்களின் தொகுப்பு, பழ வினை என்று தமிழ் நூல்கள் குறிப்பிடுகின்றன. அதில் இந்த ஜன்மத்துக்காக நாம் வாங்கி வந்த வினைகள், அதாவது இந்த ஜென்மத்துக்காக ஒதுக்கப்பட்ட வினைகள் “நுகர் வினை” அல்லது “பிராரப்தம்” என்று சொல்லுவார்கள்.
பிராரப்தத்தைக் குறிப்பிடுவதுதான் ஜன்ம ஜாதகம். (ஜனனி ஜன்ம சௌக்யானாம் வர்தநீ குல ஸம்பதாம் பதவி பூர்வ புண்யாணாம் லிக்ய தே ஜன்ம பத்திரிகா) அதில்தான் பாவங்களைத் தீர்த்துக் கொள்வதற்காக நாம் அனுபவிக்க வேண்டிய கஷ்டங்களை குறிப்பிடுகின்ற ஆறாம் இடம், எட்டாம் இடம், எல்லாம் இருக்கிறது. அடைய வேண்டிய பாக்கியங்களையும், அனுபவிக்க வேண்டிய நன்மைகளையும் பெறுவதற்கும் ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம் போன்ற இடங்களெல்லாம் இருக்கின்றன. ஆனால், பழவினை, நுகர்வினை என்ற இரண்டு வினையோடு நம்முடைய ஆன்மிகவாதிகள் நிறுத்திக் கொள்ளவில்லை. நாம் இந்த நுகர்வினையை அனுபவிக்கும் பொழுது சில வினைகளை செயல்களை) ஆற்றுகின்றோம். அதனால் எதிர்வினை (consequences) என்பது ஏற்படுகின்றது.
அந்த எதிர்வினையின் பலன் நம்முடைய வாழ்க்கையின் முடிவில் பழவினை தொகுப்போடு போய் சேர்ந்து விடுகின்றன. அதிலிருந்து ஒரு பங்கு, நுகர்வினையாகக் கொடுக்கப்பட்டு, அடுத்த ஜன்மம் நமக்கு கிடைக்கிறது. இது ஆன்மிகம் கர்மா தியரி (karma Theory) சொல்லுகின்ற ஒரு விஷயம். இந்த அடிப்படையில்தான் ஜோதிட சாஸ்திரம் இயங்குகிறது என்பதை எல்லோரும் ஏற்றுக் கொள்வார்கள். எப்பொழுது நுகர்வினையின் காரணமாக எதிர்வினை என்று ஒன்று ஏற்படுகிறதோ, அப்பொழுதே நுகர்வினை என்பது நம்மால் எதிர்கொள்ளக் கூடியது, (could be reacted or resisted) எதிர்வினை ஆற்றக்கூடியது என்பது தெரிகிறது அல்லவா!
இதைத் தெரிந்து கொண்டால், நாம் ஜாதகத்தில் உள்ள விஷயங்கள் எல்லாம் நிச்சயமாக அப்படியே நடந்தே தீரும் என்பதை ஏற்றுக் கொள்ளாமல், நம்முடைய புத்திசாலித் தனத்தினாலும், பக்தியினாலும் அல்லது வேறு ஏதாவது ஒரு பலத்தினாலும், நுகர்வினையில் மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும். இந்த ஒரு காரணத்தினால் மட்டும்தான் ஜாதகம் பார்க்கிறார்கள். அல்லது பார்க்க வேண்டும்.இப்பொழுது பல்வேறு விலங்குகள் பிறக்கின்றன. இறக்கின்றன. உண்மையில் அதற்கும் ஜாதகம் இருக்கிறது. ஆனால், அது தனக்குரிய முடிவை மாற்றிக் கொள்ள முடியாது. பக்தி செலுத்த முடியாது. வேறு வகையில் முயற்சிகளைச் செய்ய முடியாது. அது தன் வினையின் பிரகாரம் வாழ்ந்து முடித்துவிடுகிறது.
அதனால் அதற்கு என்ன பலன் என்று சொன்னால், பழவினையின் அளவு குறைகிறதே தவிர, நுகர்வினையால் ஏற்படும் எதிர்வினை பெரும்பாலும் ஏற்படுவது கிடையாது. (விதிவிலக்குகள் உண்டு). ஒரு மாடு அல்லது ஆடு இறந்து போனால், அது அதைவிட அடுத்த பிறவியில் நல்ல பிறவியாக பிறக்கும் வாய்ப்பு அதிகம். ஆனால், மனிதனுக்கு அப்படியல்ல அவன் இந்த பிறவியில் நுகர்வினையை அனுபவிக்கின்ற பொழுது எதிர்வினையாக பாவங்களைச் செய்யத் தொடங்கினால், அவன் மறுபடியும் இந்த நுகர்வினையின் எதிர்வினையான பாவங்களை மிகக் கடுமையாக எதிர்கொள்ள வேண்டிய ஒரு பிறவியாக மாற வேண்டிய கட்டாயம் ஏற்படும், என்பதைத்தான் ஆன்மிக நூல்கள் கூறுகின்றன.
அதைத்தான் ஜோதிட சாஸ்திரத்தில் நாம் தெரிந்து கொள்ள வேண்டும். எப்பொழுது நுகர்வினையின் போது எதிர்வினை நிகழ்கிறதோ, அப்பொழுதே நாம் வாழும் வாழ்க்கையில் பல மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ள முடியும் என்பது நிச்சயமாகிறது. இல்லாவிட்டால், நமக்கு ஏன் புத்தியையும் ஆராய்ச்சி மனப்பான்மையையும் இறைவன் கொடுத்து அனுப்ப வேண்டும்? ஒரு நோய் வருகிறது என்று சொன்னால், அந்த நோயை தீர்த்துக் கொள்வதற்கு வைத்திய சாஸ்திரம் கொடுத்தது மனித இனத்திற்கு தானே. எனவேதான், ஜாதகத்தின் அமைப்பைக் குறித்து நீங்கள் கவலைப் படுவதைவிட, அதனை எதிர்கொள்வது எப்படி என்பதை குறித்துக் கவலைப்படுங்கள். சரி அப்படி எதிர் கொள்ள முடியுமா? என்கிற கேள்வி உங்களுக்கு எழலாம், நிச்சயமாக எதிர்கொள்ள முடியும். அதற்கு என்ன வழி என்பதை நாம் பார்க்கலாம்.
பராசரன்
The post ஜோதிட ரகசியங்கள்- பகுதி 2 ஜாதகமும் வாழ்க்கையும் appeared first on Dinakaran.