கிரகங்கள் தரும் பெயர்கள்
ஜோதிட சாஸ்திரம் என்பது ஒரு கடல். அதனுடைய ஆழமும் அகலமும் அதிகம். அதில் கிடைக்கக்கூடிய பொருள்களும் அதிகம். ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படை அமைப்பு, நவகிரகங்களின் காரகங்களிலும் அசைவுகளிலும் இருந்தாலும், இதனைக் கணித்து பலன் சொல்வதில் அவரவர்கள் தங்கள் அனுபவம், செய்த பரிசோதனைகள் அடிப்படையில் புதிய புதிய உத்திகளைக் கையாளுகிறார்கள். வெறும் ராசி கட்டத்தை வைத்து என்ன நடந்தது என்பதைஅநாயாசமாகச் சொன்ன கிராமத்து ஜோசியர்களை பார்த்திருக்கின்றேன். மிக நுட்பமாக நட்சத்திரம், உப நட்சத்திரம், உப உப நட்சத்திரம் என்று நுணுகி ஆராய்ந்து பலன் சொல்பவர்களையும் பார்த்திருக்கின்றேன். இதிலும் சொன்ன பலன் சரியாக இருந்ததையும், முற்றிலும் மாறுபட்டு இருந்ததையும் கவனித்திருக்கிறேன்.இதற்கெல்லாம் பல்வேறு காரணங்கள் இருக்கலாம். ஒரு பிரபலமான ஜோதிடர் சொன்னார். “என்னுடைய ஜாதகத்தில் கிரகங்கள் சரியில்லாமலோ, கோள் சாரம் சரியில்லாமலோ இருந்தாலும் சந்திராஷ்டமம் போன்ற தினங்களிலும் நான் பலன் சொல்வதில்லை. அப்படி சொல்லுகின்ற பலனும் எனக்கு திருப்தியாக இருப்பதில்லை. அவசரப்பட்டு பல நேரங்களில் சொல்லிவிட நேர்கிறது’’ என்றார். வருகின்ற ஜாதகருக்கு பலன் பலிக்க வேண்டும் என்று சொன்னால், சொல்லுகின்ற ஜோதிடரின் ஜாதகமும் நன்றாக இருக்க வேண்டும். இது பெரிய பெரிய ஜோதிடர்கள் விஷயத்தில் கவனித்ததுதான் சிலர் ஆமாம் தவறிவிட்டது என்று ஏற்றுக் கொள்வார்கள். சிலர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்.
ஏற்றுக் கொள்வதாலோ ஏற்றுக் கொள்ளாமல் இருப்பதாலோ கிரகங்கள் தங்கள் பலாபலன்களை தராமல் இருப்பதில்லை. இப்பொழுது பெயரியல் ஜோதிடம் என்று பிரபலமாகப் பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது. வருகின்ற ஜாதகரின் பெயர், அவர் குடும்பத்தில் உள்ளவர்களின் பெயர், அவர் சந்திக்கும் நபர்களின் பெயர், அவர் எந்த ஊரில் எந்த வீட்டில் குடி இருக்கிறார் என்றெல்லாம் சொல்லி அசத்துகின்ற ஜோதிடர்கள் இருக்கின்றார்கள். பெயரியல் ஜோதிடம் என்பது புதுமையான விஷயம் அல்ல. அது பல்லாண்டு களாக இருப்பதுதான். ஒருவருக்கு பெயர் வைப்பது என்பது அந்தக் காலத்தில் சில அடிப்படைகளை வைத்துக்கொண்டுதான் வைப்பார்கள். இந்தக் கிரகங்களின் சேர்க்கை பல்வேறு விதமான பெயர்களைத் தரும். செவ்வாய் பலமாக இருந்தால் நிச்சயம் முருகனுடைய பெயர் (வேலாயுதம், செந்தில், கந்தன்) இப்படி ஏதாவது ஒரு வகையில் இருக்க வாய்ப்புண்டு. குருவும் செவ்வாயும் இணைந்தால், பாலமுருகன் என்ற பெயர் வரலாம். நீர் ராசியில் இந்த செவ்வாய் இருந்தால் திருச்செந்தூர் முருகன் பெயரான செந்தில்வேல் என்கின்ற பெயர் அமையலாம். கிருத்திகை நட்சத்திரத்தில் அமைந்திருந்தால், செவ்வாயும் கிருத்திகை நட்சத்திரமும் இணைந்து கார்த்திகேயன் என்கின்ற பெயரைத் தரலாம். சந்திரனும் செவ்வாயும் இணைகின்ற பொழுது, சந்திரனுக்குரிய முத்து செவ்வாய்க்குரிய வீரன் சேர்ந்து முத்துவீரன் என்கின்ற பெயரோ அல்லது வீரமுத்து என்கின்ற பெயரோ அமையலாம்.என்னுடைய நண்பர் ஒருவருக்கு வேதாசலம் என்று பெயர்.
அசலம் என்றால் அசையாதது என்று பொருள். மலைக்குப் பெயர். வேதம் என்பது குருவைக் குறிக்கும். அவருடைய ஜாதகத்திலே குருவும் செவ்வாயும் இணைந்து வலிமையாக இருப்பார்கள். அவருடைய பெயர் வேதாசலம் என்பது இந்த குருவும் செவ்வாயும் இணைந்து தந்த பெயர்கள். குரு வேதத்தையும் செவ்வாய் மலையையும் குறிக்கும். சூரியன் பலமாக இருந்தால் ஈஸ்வரன், மாணிக்கம், அரசு போன்ற பெயர்கள் வரும். சந்திரனும் சூரியனும் இணைந்த அமாவசையில் பிறந்த ஒரு ஜாதகருக்கு முத்தரசன் என்று பெயர். திருவேங்கடம், முனுசாமி, சடச்சி, சடையாண்டி போன்றவை சனி தரும் பெயர்கள். சுக்கிரனும் செவ்வாயும் சேர்ந்தால், திருமலை என்ற பெயர் வரும். ராகு சுக்கிரன் சேர்ந்த ஒரு பெண்ணுக்கு நாகவல்லி என்று பெயர். சந்திரன் ராகு நாகேஸ்வரி என்ற பெயர் தரும். ராகு சூரியன் சேர்ந்தால் நாகராஜன் என்று வரும். திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ஒருவருக்கு சூரியன் பலமாக இருக்க அவருடைய பெயர் நடராஜன் என்று அமைந்திருந்தது. பாக்கியஸ்தானமாக ரிஷபம் அமைந்த ஒரு பெண்ணுக்கு ரிஷபத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று இருந்தார். இயல்பாகவே அவருடைய பெண் பெயர் மகாலட்சுமி என்று அமைந்திருந்தது. இதே சந்திரன் அந்த ராசியில் அமர்ந்திருந்தால் அம்பாளின் பெயர் வந்திருக்கும். உச்சகிரகங்களோ ஆட்சி கிரகங்களோ மட்டுமே பெயர் தரும் என்பதில்லை. பல நேரங்களில் நீச கிரகங்கள்கூட சில ஜாதகருக்குப் பெயரைத் தந்து இருக்கின்றன. இந்த பெயரில் அவர் நல்ல முறையில் இருக்கிறார் என்று சொன்னால் அந்தப் பெயர் அவருக்கு பொருந்தி இருக்கிறது என்று பொருள். பெயர் கொடுத்த கிரகம் நீசமாக இருந்தாலும், மறைமுகமாக அது பலம் பெற்று இருக்கும். ராசியில் நீசமான கிரகம் அம்சத்தில் பலம் பெற்று இருக்கும்.
அல்லது வீடு கொடுத்த கிரகம் சாரம் கொடுத்த கிரகம் வலுவாக அமைந்து லக்கினத்தோடு அல்லது ராசியோடு தொடர்பு கொண்டிருக்கும். இப்படி மறைமுக பலம் இல்லாமல் இருக்காது. சிலர் பழைய பெயரை விட்டுவிட்டு புதிய பெயரோடு புகழ்பெறுவார்கள். கவியரசு கண்ணதாசன் இயற்பெயர் கண்ணதாசன் அல்ல. அவருக்கு முத்தையா என்று பெயர். ஆனால் புனைப்பெயர் ஒன்று வைத்துக் கொள்ள வேண்டும் என்கின்ற கட்டாயத்தில் என்ன பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறாய் என்று திருமகள் பத்திரிகை ஆசிரியர் கேட்கும் பொழுது அவர் தயங்காமல் கண்ணதாசன் என்கின்ற பெயரில் எழுதிக் கொண்டிருக்கிறேன் என்று சொல்லி இருக்கின்றார். பத்திரிகை ஆசிரியரும் “ஆமாம் ஆமாம் நானும் கேள்விப்பட்ட பெயராகத்தான் இருக்கிறது” என்று இவருக்கு வேலை போட்டுத் தந்திருக்கிறார். உண்மையில் அந்தப் பெயரில் அவர் அதற்கு முன் எழுதியது இல்லை. இப்போது
அவருக்குப் பெயர் மாற்றியது கிரகங்கள். கிரகங்கள் குறிப்பிட்ட காலத்தில், பெயரையே மாற்றி, புதுப் பெயரில் அவர்களை இயங்க வைத்து புகழையும் பொருளையும் பெற்று தரும்.வலிமையற்ற கிரகங்களின் பெயர் அமைந்திருக்கும் பொழுது அவர்களுக்கு வாழ்க்கை சிறப்பில்லாமலும் முன்னேற்றம் இல்லாமல் இருக்கும். திடீரென்று அவர்களை அறியாமலேயே பெயர் மாற்றம் நிகழும். திரைப்படங்களில் பார்த்திருக்கலாம். நடிகர் நடிகைகளுக்கு பழைய பெயர் வேறாக இருக்கும். புதிய பெயர் வைக்கப்பட்டு, பெயர் மிகப் பிரபலமாகி பெயரும் புகழும் பெற்றுத் தரும். இதில் சொல்ல வந்தது, நாம் புத்திசாலித்தனமாகப்பெயரை மாற்றி வைத்துக் கொண்டு கிரகங்களை ஏமாற்றிவிடலாம் என்று நினைக்க கூடாது.அதனால்தான் சில பேர் பெயரை மாற்றி வைத்துக் கொண்டும் முன்னேறாமல் தவித்துக் கொண்டிருப்பார்கள். பெயர் தானாகவே மாறும். எப்பொழுது மாறும் என்று சொன்னால், நீங்கள் உற்சாகமாக உங்களுடைய வாழ்க்கையை, நேர்மையாக, இப்படித்தான் நடத்த வேண்டும் என்கின்ற முயற்சியில் சற்றும் தளராமல், இறைவனையும் வேண்டிக் கொண்டு இருந்தால், ஒரு கட்டத்தில் தானாகவே பெயர் மாறிவிடும். அது உங்களுடைய யோகதசை காலமாக இருக்கும்.
பராசரன்
The post ஜோதிட ரகசியங்கள் appeared first on Dinakaran.