ஜேஇஇ தேர்வில் தளர்வுகள் திரும்பப் பெறப்படுவதாக என்டிஏ அறிவிப்பு!

1 week ago 3

நம் நாட்டில் ஐஐடி, என்ஐடி போன்ற மத்திய உயர்கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெற வேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2025-26ஆம் கல்வியாண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜேஇஇ முதன்மைத் தேர்வில் தளர்வுகள் திரும்பப் பெறப்படுவதாக என்டிஏ அறிவித்துள்ளது. இதுகுறித்து என்டிஏ வெளியிட்ட செய்திக்குறிப்பில், ‘ஜேஇஇ முதன்மைத் தேர்வு பிஇ, பி.ஆர்க், பி.பிளானிங் ஆகிய 3 விதமான படிப்புகளுக்காக நடத்தப்படுகிறது. எனவே, ஒவ்வொரு படிப்புக்கும் ஏற்றவாறு 3 தேர்வுகள் நடைபெறும். அதாவது, பிஇ, பி.டெக் படிப்பில் சேர விரும்புபவர்கள் முதன்மைத் தேர்வின் முதல் தாளை எழுத வேண்டும். அதில் கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் இருந்து கேள்விகள் கேட்கப்படும்.பி.ஆர்க், பி.பிளானிங் படிப்புகளுக்கான 2ஆம் தாள் தேர்வில் கணிதம் மற்றும் வரைபடம், திட்டமிடல் தொடர்பான வினாக்கள் மட்டுமே இடம்பெறும். முதன்மைத் தேர்வு வினாத்தாளில் பகுதி அ, பகுதி ஆ என இரு பிரிவுகளாகக் கேள்விகள் கேட்கப்படும். இதில் ஆ பிரிவில் வரும் 5 கேள்விகளும் கட்டாயம் பதிலளிப்பவையாக இருந்தன. கொரோனா பரவல் காலக்கட்டத்தில் மாணவர்களின் நலன் கருதி அதில் தளர்வு வழங்கப்பட்டது. அதன்படி பகுதி ஆ பிரிவில் 10 கேள்விகள் வழங்கி அதில் 5 வினாக்களுக்கு மட்டும் பதில் அளித்தால் போதும் என்ற நடைமுறை இந்தாண்டு வரை அமலில் இருந்தது. தற்போது கொரோனா பேரிடர் முடிந்து இயல்புநிலை திரும்பிவிட்ட நிலையில் தேர்வுமுறையில் வழங்கப்பட்ட தளர்வுகள் திரும்பப் பெறப்படுகின்றன. அந்த வகையில் பகுதி ஆ இனி பழைய தேர்வு முறைப்படி கட்டாயப் பிரிவாகவே இருக்கும். அதிலுள்ள 5 கேள்விகளுக்கும் மாணவர்கள் பதில் அளிக்க வேண்டும். இந்த நடைமுறை 2025ஆம் ஆண்டு தேர்வு முதல் அமலுக்கு வருகிறது. கூடுதல் விவரங்களை www.nta.ac.in என்ற வலைத்தளத்தில் அறியலாம், என அதில் கூறப்பட்டுள்ளது.

பாலிடெக்னிக் தேர்வு புதிய அட்டவணை வெளியீடு

பாலிடெக்னிக் செமஸ்டர் தேர்வுகளுக்கான திருத்தப்பட்ட புதிய அட்டவணையைத் தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து தொழில்நுட்பத் தேர்வுகள் வாரியத் தலைவரும், தொழில்நுட்பக் கல்வி ஆணையருமான டி.ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பாலிடெக்னிக் பொறியியல் டிப்ளமோ படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நவம்பர் 12ஆம் தேதி தொடங்கி 27ஆம் தேதி வரை தொடர்ந்து (ஞாயிறு நீங்கலாக) நடைபெறும். தினமும் காலை 9.30 முதல் மதியம் 12.30 மணி வரையிலும், பிற்பகல் 2 மணி முதல் மாலை 5 மணி வரையிலும் தேர்வு நடைபெறும். தேர்வு தொடங்குவதற்கு 15 நாட்கள் முன்பாக, தொழில்நுட்ப கல்வி இயக்ககத்தின் www.dte.tn.gov.in என்ற இணையதளத்தில் முழு விவரங்கள் அடங்கிய தேர்வு அட்டவணை வெளியிடப்படும். தேர்வுப் பணிகள் முடிவடைந்து, அடுத்த செமஸ்டருக்கான வகுப்புகள் டிசம்பர் 23ஆம் தேதி தொடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

JEE தேர்வில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகள்

மத்திய உயர்கல்வி நிறுவனங்களான ஐஐடி, என்ஐடி கல்வி நிறுவனங்களில் இளநிலைப் படிப்புகளில் சேர ஒருங்கிணைந்த நுழைவுத் தேர்வில் (ஜேஇஇ) தேர்ச்சி பெறவேண்டும். இவை ஜேஇஇ முதன்மைத் தேர்வு, பிரதான தேர்வு என இரு பிரிவாக நடைபெறும். இதில் முதன்மைத் தேர்வானது தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) சார்பில் ஆண்டுதோறும் 2 கட்டங்களாக நடத்தப்பட்டுவருகிறது. அதன்படி 2025-26ஆம் கல்வியாண்டுக்கான முதன்மைத் தேர்வு ஜனவரி, ஏப்ரல் மாதங்களில் நடைபெற உள்ளன. இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக உள்ளது. இந்நிலையில் ஜேஇஇ தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான திருத்தப்பட்ட சலுகை விவரங்களை என்டிஏ தற்போது வெளியிட்டுள்ளது. அதில், ஜேஇஇ தேர்வு எழுதவுள்ள மாற்றுத்திறனாளிகள் உதவியாளர்களை சுயமாகத் தேர்வுசெய்து கொள்ளலாம் அல்லது அதற்கான தேர்வுக் குழுவை அணுக வேண்டும். எனினும், தேர்வுக்கு 2 நாட்களுக்கு முன்பு சம்பந்தப்பட்ட தேர்வர்கள், உதவியாளரை சந்திக்க அனுமதிக்க வேண்டும். இதன்மூலம் அந்த உதவியாளர் தகுதியானவரா, இல்லையா என்பதைத் தேர்வர்கள் சரிபார்த்துக்கொள்ளலாம். இதேபோல், மாற்றுத்திறன் தேர்வர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டு வரும் கூடுதல் நேரம் என்ற வார்த்தை இனி இழப்பீட்டு நேரம் என மாற்றப்பட வேண்டும். உதவியாளர்களைக் கொண்டு தேர்வை எதிர்கொள்ளும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு மணிநேரத்திற்கு இழப்பீட்டு நேரமானது 20 நிமிடங்களுக்குக் குறைவாக இருக்கக்கூடாது. மேலும், கண் தெரியாதவர்கள், இரு கைகளும் பாதிக்கப்பட்டவர்கள், பெரு மூளைவாதம் ஆகியவற்றில் குறைபாடு உள்ளவர்களுக்கு 3 மணி நேரத் தேர்வுக்குக் குறைந்தபட்சம் ஒரு மணிநேரம் இழப்பீட்டு நேரம் அனுமதிக்கலாம். தேர்வின் காலம் ஒரு மணி நேரத்துக்குக் குறைவாக இருந்தால், அதற்கேற்ற விகித அடிப்படையில் இழப்பீட்டு நேரத்தை அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களைப் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்த அறிவுறுத்தல்

தமிழகப் பள்ளிக்கல்வித் துறையில் செயல்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் மற்றும் இதர பணிகளை கண்காணிப்பதற்காக மாதந்தோறும் அலுவல் ஆய்வுக்கூட்டம் நடத்தப்படுகிறது. அதன்படி, நடப்பு மாதாந்திர அலுவல் ஆய்வுக்கூட்டம் துறையின் செயலர் சோ.மதுமதி தலைமையில் காணொலிக் காட்சி வழியாக சமீபத்தில் நடைபெற்றது. இதில் துறைசார்ந்த இயக்குநர்கள், முதன்மைக் கல்வி அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் தமிழக அரசால் அமல்படுத்தப்பட்டுள்ள நலத்திட்டங்களின் தற்போதைய நிலை, பழுதான நிலையில் உள்ள கட்டடங்களை அகற்றும் பணிகளின் நிலை, நீதிமன்ற வழக்குகள் உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. குறிப்பாக 10, 11, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான முன்னேற்பாடுகள், மாணவர்களைப் பொதுத்தேர்வுக்கு தயார்படுத்துதல் ஆகிய செயல்பாடுகளைத் தீவிரமாக மேற்கொள்ளவும் முதன்மைக் கல்வி அலுவலர்களுக்குச் செயலர் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இத்தகவலைக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post ஜேஇஇ தேர்வில் தளர்வுகள் திரும்பப் பெறப்படுவதாக என்டிஏ அறிவிப்பு! appeared first on Dinakaran.

Read Entire Article